إِنَّكَ مَيِّتٌ وَإِنَّهُمْ مَيِّتُونَ (القرآن )39:30
அல்லாஹ் கூறினான்: '(நபியே!) நிச்சயமாக நீரும் மரணிக்கக்கூடியவரே அவர்களும் மரணிக்கக்கூடியவர்களே ஆவர்'. (அல்குர்ஆன் 39:30)
இந்த வசனத்தில் ஏக இறைக்கொள்கையை இறைவன் சொல்லிக்காட்டுகிறான். அதாவது, இறைவனாகிய எனக்கு மரணம் என்பது கிடையாது. மாறாக உலகில் என்னால் படைக்கப்பட்ட அனைத்திற்கும் மரணம் உண்டு என்பதைத்தான் சொல்கிறான். அந்த அடிப்படையில் நபி (ஸல்) அவர்களையும் மரணம் தழுவும் என்கிறான். ஆனால் இவ்வசனத்திற்கு வஹ்ஹாபிகள் செய்கின்ற குழப்பம் பட்டியலிடமுடியாது. ரஸூலுல்லாஹ் மவ்தா பொய்டாங்க. மண்ணோடு மண்ணா போய்டாங்க (நவூதுபில்லாஹ்) அவர்களுக்கும் நமக்கும் எந்த ஆத்மார்த்தமான தொடர்ப்பும் இல்லை என்கிறார்கள். அஹ்லுஸ்ஸுன்னாவினர்களாகிய நாம், நம் உயிரினும் மேலான கண்மனி நாயகம் (ஸல்) அவர்கள் உலக நியதிப்படி மவ்தாகிவிட்டார்கள். ஆனாலும் நமக்கும் அவர்களுக்கும் ஆத்மார்த்தமான ஒரு தொடர்ப்பு இருந்துக்கொண்டே இருக்கிறது. எனவே, அவர்கள் மறைந்தும் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள் என்கிறோம். அது எப்படி என்பதற்கான ஆதராங்களை அள்ளித்தருகிறேன் வாருங்கள்.
மவ்த் என்றால் என்ன?
இஸ்லாமியத்தில் மவ்த் என்பது இல்லாமையைக் குறிக்கும் ஓர் அம்சமல்ல. மாறாக, அழியக்கூடிய இந்த உலகத்தைவிட்டு அழியாத மறுஉலகிற்கு இடம்பெயர்ந்து செல்லுதல் என்பததுதான் ஆழமான கொள்கையாகும். அதனால்தான், இறந்துவிட்ட ஒருவரின் மவ்த் செய்தியை நாம் சொல்லுகின்றபோது. 'தாருல் ஃபனாவை விட்டும் தருல் பகாவிற்கு' (அழியக்கூடிய உலகைவிட்டும் அழியாத உலகிற்க்கு) சென்றுவிட்டார் என்கிறோம். எனவே, மவ்த் என்பது ஒரு வாழ்க்கையின் முடிவும் மற்றொரு வாழ்க்கையின் தொடக்கமும் ஆகும். மவ்த் இல்லாமையைக் குறிக்கும் ஓர் அம்சமல்ல என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் ஆழமாக தங்களது நெஞ்சிலே பதியவைத்துக் கொள்ளவேண்டும்.
உயிர் சலுகை வழங்கப்பட்ட ஒரே மனிதர் நபி (ஸல்)
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَلَسَ عَلَى الْمِنْبَرِ فَقَالَ: إِنَّ عَبْدًا خَيَّرَهُ اللَّهُ بَيْنَ أَنْ يُؤْتِيَهُ مِنْ زَهْرَةِ الدُّنْيَا مَا شَاءَ وَبَيْنَ مَا عِنْدَهُ فَاخْتَارَ مَا عِنْدَهُ فَبَكَى أَبُو بَكْرٍ وَقَالَ: فَدَيْنَاكَ بِآبَائِنَا وَأُمَّهَاتِنَا فَعَجِبْنَا لَهُ وَقَالَ النَّاسُ: انْظُرُوا إِلَى هَذَا الشَّيْخِ يُخْبِرُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ عَبْدٍ خَيَّرَهُ اللَّهُ بَيْنَ أَنْ يُؤْتِيَهُ مِنْ زَهْرَةِ الدُّنْيَا وَبَيْنَ مَا عِنْدَهُ وَهُوَ يَقُولُ فَدَيْنَاكَ بِآبَائِنَا وَأُمَّهَاتِنَا فَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هُوَ الْمُخَيَّرَ وَكَانَ أَبُو بَكْرٍ هُوَ أَعْلَمَنَا بِهِ (بخارى-3904 مسلم-2382 ترمذى-
3660)
அபூஸயீதுல் குத்ரீ (ரளி) அறிவிக்கிறார்கள்: 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது) சொற்பொழிவு மேடை மீதமர்ந்து, (மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அதில்,) 'அல்லாஹ் தன் அடியார் ஒருவருக்கு உலகச் செல்வத்தில் அவர் விரும்புவ(து எதுவாயினும் அ)தைக் கொடுப்பதாகவும் அல்லது தன்னிடமுள்ள (மறுமைப் பெருவாழ்வு)தனை எடுத்துக்கொள்ளும்படியும் (இரண்டிலொன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள) வாய்ப்பளித்தான். அப்போது அந்த அடியார் அல்லாஹ்விடமிருப்பதையே தேர்ந்தெடுத்துக்கொண்டார்' என்று சொன்னார்கள். உடனே, அபூபக்கர் (ரளி) அவர்கள் அழுதார்கள். மேலும் (நபியவர்களை நோக்கி) 'தங்களுக்கு எங்கள் தந்தையரும் அன்னையரும் அர்ப்பணமாகட்டும்' என்று சொன்னார்கள். நாங்கள் அபூபக்கரு(டைய அழுகை)க்காக வியப்படடைந்தோம். மக்கள், 'இந்த முதியவரைப் பாருங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ் தன் அடியர் ஒருவருக்கு உலகச் செல்வத்தில் அவர் விரும்புவதைக் கொடுப்பதாகவும் அல்லது தன்னிடமிருப்பதை எடுத்துக்கொள்ளும்படியும் இரண்டிலொன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ள வாய்ப்பு வழங்கிய (மகிழ்ச்சியான விஷயத்)தைத் தெரிவித்துக்கொணடிருக்க இவர், தங்களுக்கு எங்கள் தந்தையரும் அன்னையரும் அர்ப்பணமாகட்டும் என்று (அழுதபடியே) கூறுகிறரோ' என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்களே இப்படி வாய்ப்பு வழங்கப்பட்டவராவார். அபூபக்கர் (ரளி) அவர்கள்தான் எங்களில் அல்லாஹ்வின் தூதரைப் பற்றி அதிகம் அறிந்தவராக இருந்தார்கள்'. (புகாரி-3904, முஸ்லிம்-2382, திர்மி-3660)
அண்ணலார் (ஸல்) அவர்கள் நினைத்திருந்தாள் இந்த பொன்னான வாய்ப்பினை பயன்படுத்தி உலக அழிவு நாள்வரைகூட வாழ்ந்திருக்காலம். இப்படியொரு உயிர் சலுகை உலகத்தில் யாருக்கும் வழங்கப்படவில்லை. ஆனாலும் அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தையே தேர்ந்தெடுத்தார்கள். காரணம் அல்லாஹ்வே அண்ணலார் (ஸல்) அவர்களை சந்திக்க ஆசைப்பட்டான்.
ஹபீபுல்லாஹ்வை சந்திக்க ஆசைப்பட்ட அல்லாஹ் (ஜல்)
لما مرض رسول الله صلى الله عليه وسلم أتاه جبريل فقال: 'يا محمد! إن الله أرسلني إليك تكريما لكوتشريفا لك خاصة لك يسألك عما هو أعلم به منك يقول: كيف تجدك؟ قال: أجدني يا جبريل! مغموما وأجدني يا جبريل مكروبا'. ثم جاءه اليوم الثاني فقال له ذلك فرد عليه النبي صلى الله عليه وسلم كما رد أول يوم ثم جاءه اليوم الثالث فقال له كما قال أول يوم ورد عليه كما رد عليه وجاء معه ملك يقال له و: إسماعيل على مائة ألف ملك كل ملك على مائة ألف ملك فاستأذن عليه فسأله عنه. ثم قال جبريل: هذا ملك الموت يستأذن عليك. ما استأذن على آدمي قبلك ولا يستأذن على آدمي بعدك. فقال: ائذن له فأذن له فسلم عليه ثم قال: يا محمد! إن الله أرسلني إليك فإن أمرتني أن أقبض روحك قبضت وإن أمرتني أن أتركه تركته فقال: وتفعل يا ملك الموت؟ قال: نعم بذلك أمرت وأمرت أن أطيعك. قال: فنظر النبي صلى الله عليه وسلم إلى جبريل عليه السلام فقال جبريل: يا محمد! إن الله قد اشتاق إلى لقائك فقال النبي صلى الله عليه وسلم لملك الموت: ' امض لما أمرت به' فقبض روحه فلما توفي رسول الله صلى الله عليه وسلم وجاءت التعزية سمعوا صوتا من ناحية البيت : السلام عليكم أهل البيت ورحمة الله وبركاته إن في الله عزاء من كل مصيبة وخلفا من كل هالك ودركا من كل فائت فبالله فثقوا وإياه فارجوا فإنما المصاب من حرم الثواب . فقال علي : أتدرون من هذا ؟ هو الخضر عليه السلام. (بيهقى فى دلائل النبوة-7:267)
நபி (ஸல்) அவாகள் நோய்வாய்ப்பட்டிருந்த போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் (நலம் விசாரிக்க) வந்து, முஹம்மதே! உங்களுக்கு சங்கையும் மரியாதையும் செய்யுமாறு அல்லாஹ் என்னை உம்மிடம் அனுப்பியுள்ளான். குறிப்பாக உம்மைப்பற்றி முழுமையாக அவன் அறிந்திருந்தும் உம்மை நலம் விசாரித்து வரும்படியாக கூறினான். ஆகவே, (சொல்லுங்கள் முஹம்மதே!) உடல் நிலை எப்படி இருக்கிறது? என்று (முதல்நாள்) கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், ஜிப்ரயீலே! எனக்கு ஒரே மயக்கமாகவும் கஷ்டமாகவும் இருக்கிறது என்றார்கள். (ஜிப்ரயீல் சென்றுவிட்டார்.) இரண்டாம் நாள் வந்து, முஹம்மதே! உடல் நிலை எப்படி இருக்கிறது? என்று ஜிப்ரயீல் (அலை) கேட்டதற்கு முதல்நாள் இருந்ததைப்போலத்தான் இன்றும் இருக்கிறது என்றார்கள். (ஜிப்ரயீல் சென்றுவிட்டார்.) மூன்றாம் நாள், முஹம்மதே! உடல் நிலை எப்படி இருக்கிறது? என்றார்கள். முன்புள்ளநாள் போலத்தான் இருக்கிறது என்றார்கள். (மூன்றாம் நாளில் ஜிப்ரயீலோடு) ஒரு மலக்கும் வந்திருந்தார். அவர் பெயர் 'இஸ்மாயீல்' என்பதாகும். அவர் தன்னோடு ஒரு இலட்சம் மலக்கு(வானவர்)களை அழைத்து வந்திருந்தார். இந்த ஒரு இலட்சம் மலக்குகளில் ஒவ்வொருவருக்கும் (உதவிக்கு) ஒரு இலட்சம் மலக்குகள் இருந்தார்கள். அ(ந்த இஸ்மாயில் என்ற வான)வர் நபி (ஸல்) அவர்களிடம் செல்ல அனுமதி கேட்டார். இவர் யார்? என்று நபியவர்கள் (ஜிப்ரயீலிடம்) கேட்டார்கள். இவர்தான் மலகுல் மவ்த் (உயிரை கைபற்றும் வானவர்) ஆவார். உங்கள் முபாரக்கான உயிரை கைபற்ற உம்மிடம் அனுமதி கேட்கிறார் என்றார்கள். இவர் உமக்கு முன்புள்ள எந்த மனிதர்களிடமும் அனுமதி கேட்டதுமில்லை¢ உமக்கு பின்னுள்ள எந்த மனிதர்களிடம் அனுமதி கேட்கவும் மாட்டார் என்றும் கூறினார். அவர்களை அனுமதியுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அந்த மலக்குல் மவ்த்) நபியவர்களுக்கு ஸலாம் கூறிக்கொண்டார். பிறகு, முஹம்மதே! அல்லாஹ் என்னை தங்களிடம் அனுப்பிவைத்தான். நீங்கள் உங்கள் உயிரை கைப்பற்ற சொன்னால் கைபற்றுவேன்¢ கைபற்ற வேண்டாம் என்றால் கைபற்றமாட்டேன் என்று கூறினார். அவருக்கு நபியவர்கள், மலகுல் மவ்தே! சொன்னபடியே கைபற்றுவீரா? என்று கேட்டார்கள். அதற்கவர் ஆம்! அவ்வாறுதான் எனக்கு கட்டளை. ஆனாலும் (முஹம்மதே!) உங்களுக்கு கட்டுப்படுமாறும் அல்லாஹ் ஏவியிருக்கிறான் என்றார். நபியவர்கள், ஜிப்ரயீலைப் பார்த்தார்கள். ஜிப்ரயீல் (அலை) அவர்கள், 'முஹம்மதே! அல்லாஹ் உம்மை சந்திக்க ஆசையாக இருக்கிறான் என்றார்கள்.' அப்போது நபியவர்கள் மலகுல் மவ்திடம், உமக்கு கட்டளையிடப்பட்டதை செய்வீராக என்றார்கள். அதற்குபிறகுதான் பூமான் நபி (ஸல்) அவர்களின் பரிசுத்தமான உயிரை அவர் கைப்பற்றினார். அப்பொழுது, அந்த வீட்டின் மூளையிலருந்து 'அஸ்ஸலாமு அலைக்கும் அஹ்லல் பைத் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு' என்று இறங்கள் சப்தம் கேட்டது. அந்த சப்தத்தை (அங்கிருந்தோர் அனைவரும்) கேட்டனர். (அந்த இறங்களில்) ஒவ்வொரு சோதனைக்கும் ஒர் இறங்கள் உண்டு, ஒவ்வொரு அழிவுக்கும் ஒரு பகரம் உண்டு மற்றும் ஒவ்வொரு இழப்பிற்கும் ஓர் இழப்பீடு உண்டு. எனவே, அல்லாஹ்வை பயந்துக்கொள்ளுங்கள், அவனையே ஆதரவு வையுங்கள். நன்மை தடுக்கப்பட்டவனே சோதனைக்கு ஆளக்கப்பட்டவனாவான் (என்று அந்த இறங்கள் சப்தம் இருந்தது) இது யாருடைய சப்தம் என்று உங்களுக்கு தெறியுமா? என்று அலி (ரளி) அவர்கள் கேட்டுவிட்டு, இது களிர் (அலை) அவர்களுடைய சப்தமாகும் என்று கூறினார்கள். ' (பைஹகீ-ஃபீ தலாயிலுன் நுபுவத் 7:267)
அனைவருக்கும் இரண்டு மரணம் உண்டு
قال الله تعالى: كَيْفَ تَكْفُرُونَ بِاللَّهِ وَكُنْتُمْ أَمْوَاتًا فَأَحْيَاكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ (القرآن 2:28)
قَالُوا رَبَّنَا أَمَتَّنَا اثْنَتَيْنِ وَأَحْيَيْتَنَا اثْنَتَيْنِ فَاعْتَرَفْنَا بِذُنُوبِنَا فَهَلْ إِلَى خُرُوجٍ مِنْ سَبِيلٍ (القرآن 40:11)
அல்லாஹு தஆலா கூறுகிறான்: '(மக்களே!) நீங்கள் அல்லாஹ்வை எவ்வாறு நிராகரிக்கிறீர்கள்? நீங்கள் உயிரற்றவர்களாய் (மய்யித்தாய்) இருந்தீர்கள். அவனே உங்களுக்கு உயிர் (ஹயாத்) கொடுத்தான். பின்னர், அவனே உங்களை இறக்கச் செய்வான். பின்னர் (மீண்டும்) உங்களை உயிர்ப்பிப்பான். பின்னர் அவனிடமே நீங்கள் கொண்டுவரப்படுவீர்கள்'. (அல்குர்ஆன் 2:28)
'மேலும், அதற்க(அந்த நிராகரிப்பாளர்)கள், எங்கள் ரப்பே! இருமுறை எங்களை நீ மரிக்கச் செய்தாய். இருமுறை எங்களை நீ உயிர்ப்பித்தாய். எங்களது பாவங்களை நாங்கள் ஒப்புக் கொண்டோம். எனவே, (நாங்கள் நரகத்தைவிட்டு) வெளியேறுவதற்கு வழியேதும் உண்டா? என்று கேட்பார்கள்'. (அல்குர்ஆன் 40:11)
மேலே கூறப்பட்ட இரண்டு வசனங்களில் மனிதன் ஆலமுல் அர்வாஹில் (ஆத்ம உலகில்) மய்யித்தாக இருந்தான். அவனுக்கு உயிர் (ரூஹ்) தரப்பட்டு துன்யாவிற்கு வந்தான். சில ஆண்டுகள் வாழ்ந்த பின்பு மரணமவான். இது முதல் மரணம். மறுபடியும் கப்ரில் வைக்கப்ட்ட பிறகு அவனுக்கு உயிர் கொடுத்து எழுப்பப்படும். சில கேள்விகளை கேட்கப்படும். நல்ல பதிலை சொல்லிவிட்டால், மஹ்ஷருக்கு உன்னை எழுப்பும்வரை மணமகன் உறங்குவதைப்போல் உறங்கு என்று சொல்லி மறுபடியும் மவ்தாக்கப்படும். இது சாதாரண மனிதர்களுக்கு உள்ளநிலை. ஆனால் நபிமார்கள,; ஸித்தீகின்கள், ஷுஹதாக்கள் மற்றும் ஸாலிஹீன்கள் ஆகியோர்களுக்கு அப்படியல்ல. இவர்களில் குறிப்பாக கண்மனி நாயகம் (ஸல்) அவர்கள் உலகில் விதிக்கப்பட்ட முதல் மரணத்தை அடைந்துவிட்டார்கள். கப்ரில் அவர்களுக்கு உயிர் தரப்பட்டபின்பு மறுபடியும் மற்றவர்களைப்போல் மரணமாகாமல் உயிரோடுதான் இருக்கிறார்கள். இதுதான் 'அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஆவினர்' அசைக்கமுடியாத கொள்கையாகும். இதை அபூபக்கர் (ரளி) அவர்களின் கூற்று தெளிவுபடுத்துகிறது. அது என்ன? இதோ! தொடர்ந்து படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
நபி (ஸல்) அவர்களுக்கு இரண்டு மரணமில்லை
فَجَاءَ أَبُو بَكْرٍ فَكَشَفَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَبَّلَهُ قَالَ بِأَبِي أَنْتَ وَأُمِّي طِبْتَ حَيًّا وَمَيِّتًا وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا يُذِيقُكَ اللَّهُ الْمَوْتَتَيْنِ أَبَدًا (بخارى-3667 سنن الكبرى –للبيهفى 8:142) أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَتْهُ قَالَتْ أَقْبَلَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَلَى فَرَسِهِ مِنْ مَسْكَنِهِ بِالسُّنْحِ حَتَّى نَزَلَ فَدَخَلَ الْمَسْجِدَ فَلَمْ يُكَلِّمْ النَّاسَ حَتَّى دَخَلَ عَلَى عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا فَتَيَمَّمَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مُسَجًّى بِبُرْدِ حِبَرَةٍ فَكَشَفَ عَنْ وَجْهِهِ ثُمَّ أَكَبَّ عَلَيْهِ فَقَبَّلَهُ ثُمَّ بَكَى فَقَالَ بِأَبِي أَنْتَ يَا نَبِيَّ اللَّهِ لَا يَجْمَعُ اللَّهُ عَلَيْكَ مَوْتَتَيْنِ أَمَّا الْمَوْتَةُ الَّتِي كُتِبَتْ عَلَيْكَ فَقَدْ مُتَّهَا (بخارى-1241 نسائ-1840 احمد-1:117) إِنَّ حَيَاته صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فِي الْقَبْر لَا يَعْقُبهَا مَوْت بَلْ يَسْتَمِرّ حَيًّا، وَالْأَنْبِيَاء أَحْيَاء فِي قُبُورهمْ (فتح البارى)
(நபி (ஸல்) அவர்களள் மரணமடைந்த பிறகு) அபூபக்கர் (ரளி) அவர்கள் (அங்கே) வந்து, அல்லாஹ்வின் தூதரைப் போர்த்தியிருந்த போர்வையை விலக்கி அவர்களை (நெற்றியில்) முத்தமிட்டு, 'தங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும்! நீங்கள் உயிராயிருந்தபோதும் நறுமணம் கமழ்ந்தீர்கள். இறந்த நிலையிலும் மணம் கமழ்கிறீர்கள். என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது ஆணையாக! அல்லாஹ் உங்களுக்கு இரண்டு மரணங்களை அளிக்கப்போவதில்லை என்று கூறினார்கள்'. (புகாரி-3667, ஸுனனுல் குப்ரா-பைஹகி 8:142)
ஆயிஷா (ரளி) அறிவிக்கிறார்கள்: '(நபி (ஸல்) அவர்களின் இறப்புச் செய்தியைக் கேள்விப்பட்ட என் தந்தை) அபூபக்கர் (ரளி) அவர்கள், 'அஸ்ஸுன்ஹ்' எனுமிடத்திலுள்ள தமது வீட்டிலிருந்து குதிரையில் வந்து இறங்கி, (மஸ்ஜிதுன் நபவீ) பள்ளிவாசலுக்குள் நுழைந்தார்கள். அவர்கள் யாரிடமும் பேசாமல் நேரடியாக என் அறைக்கு வந்தார்கள். அங்கு நபி (ஸல்) அவர்களை நாடிச் சென்றார்கள் - கரை வேலைப்பாடுகள் செய்யப்பட்ட போர்வையால் நபியவர்களின் உடல் போர்த்தப்பட்டிருந்தது. உடனே அபூபக்கர் (ரளி) அவர்கள், நபி (ஸல்) அவர்களது முகத்திலுள்ள துணியை அகற்றிவிட்டு, அவர்களின் மீது விழுந்து முத்தமிட்டுவிட்டு அழுதார்கள். பிறகு, 'அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் தாயும் உங்களுக்கு அர்ப்பணம்! அல்லாஹ் உங்களுக்கு இரண்டு இறப்புகளை ஏற்படுத்தவில்லை. உங்கள் மீது விதிக்கப்பட்ட அந்த இறப்பை நீங்கள் அடைந்துவிட்டீர்கள் என்று கூறினார்கள்'. (புகாரி-1241, நஸாயீ-1840, அஹ்மது-1:117)
ஸஹீஹுல் புகாரிக்கு விரிவுரை எழுதிய அல்லாமா இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸிற்கு விளக்கவுரை எழுதும்போது, 'நபி (ஸல்) அவர்கள் மரணத்திற்குப்பிறகு கப்ரிலும் மய்யித்தாகவே இருக்கமாட்டார்கள். மாறாக, கப்ரில் உயிரோடுதான் இருக்கிறார்கள். ஏனெனில், எல்லா நபிமார்களும் அவர்களது கப்ரில் உயிரோடுதான் இருக்கிறார்கள்' என்று விளக்கம் தந்துள்ளார்கள். (ஃபத்ஹுல் பாரி)
கப்ரில் காட்சி தரும் கண்மனி நாயகம் (ஸல்)
عَنْ أَنَسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْعَبْدُ إِذَا وُضِعَ فِي قَبْرِهِ وَتُوُلِّيَ وَذَهَبَ أَصْحَابُهُ حَتَّى إِنَّهُ لَيَسْمَعُ قَرْعَ نِعَالِهِمْ أَتَاهُ مَلَكَانِ فَأَقْعَدَاهُ فَيَقُولَانِ لَهُ مَا كُنْتَ تَقُولُ فِي هَذَا الرَّجُلِ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَقُولُ أَشْهَدُ أَنَّهُ عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ (بخارى-1338مسلم-2870نسائى-2051 ابوداود-4752)
அனஸ் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'ஓர் அடியாரின் உடலைக் கப்ர் (சவக்)குழியில் அடக்கம் செய்துவிட்டு, அவருடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களின் காலணிகள் எழுப்பும் ஓசையை நிச்சயமாக அவர் (மய்யித்) செவியுறுவார். ஆதற்குள் இரண்டு வானவர்கள் அவரிடம் வந்து அவரை எழுப்பி உட்கார வைத்து, 'முஹம்மது (ஸல்) எனும் இந்த மனிதரைப் பற்றி நீ என்ன கருதிக்கொண்டிருந்தாய்?' எனக் கேட்பார். அதற்கு 'இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார் என நான் உறுதிகூறுகிறேன்' என்பார். (புகாரி-1338, முஸ்லிம்-2870, நஸாயி-2051, அபூதாவூது-4752,)
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ: رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قُبِرَ الْمَيِّتُ أَوْ قَالَ أَحَدُكُمْ أَتَاهُ مَلَكَانِ أَسْوَدَانِ أَزْرَقَانِ يُقَالُ لِأَحَدِهِمَا الْمُنْكَرُ وَالْآخَرُ النَّكِيرُ فَيَقُولَانِ: مَا كُنْتَ تَقُولُ فِي هَذَا الرَّجُلِ؟ فَيَقُولُ مَا كَانَ يَقُولُ هُوَ عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ. (ترمذى-1071
அபூஹுரைரா (ரளி) அறிவிக்கிறார்கள்: 'இறந்தவர் அல்லது உங்களில் (இறந்துவிட்ட) ஒருவர் மண்ணறைக்குள் வைத்து அடக்கம் செய்யப்பட்டதும், நீலநிறக் கண்கள் உடைய கறுப்புநிற வானவர்கள் இருவர் அவரிடம் வருகின்றனர். அவர்களில் ஒருவர் 'முன்கர்' என்றும் மற்றொருவர் 'நகீர்' என்றும் சொல்லப்படும். அப்போது அவர்கள் இருவரும், '(இதோ!) இந்த மனிதர் பற்றி நீ என்ன சொல்லிக்கொண்டிருந்தாய்?' என்று கேட்பார்கள். அதற்கு அவர், 'இவர்தான் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்கள்' என்று கூறுவார்கள். (திர்மிதி-1071)
மண்ணிக்கும் மாண்பாளர் மாநபி (ஸல்)
وَلَوْ أَنَّهُمْ إِذْ ظَلَمُوا أَنْفُسَهُمْ جَاءُوكَ فَاسْتَغْفَرُوا اللَّهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُولُ لَوَجَدُوا اللَّهَ تَوَّابًا رَحِيمًا (القرآن 4:64)
(நபியே!) அவர்கள் தமக்குத்தாமே தீங்கிழைத்தபோது, உம்மிடம் வந்து, அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி, அவர்களுக்காகத் தூத(ராகிய நீ)ரும் பாவமன்னிப்புக் கோரினால், மன்னிப்பை ஏற்பவனாகவும் மிகுந்த அன்புடையோனாகவும் அல்லாஹ்வை அவர்கள் காண்பார்கள். (அல்குர்ஆன் 4:64)
العُتْبي، قال: كنت جالسا عند قبر النبي صلى الله عليه وسلم، فجاء أعرابي فقال: السلام عليك يا رسول الله، سمعت الله يقول: {وَلَوْ أَنَّهُمْ إِذْ ظَلَمُوا أَنْفُسَهُمْ جَاءُوكَ فَاسْتَغْفَرُوا اللَّهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُولُ لَوَجَدُوا اللَّهَ تَوَّابًا رَحِيمًا} وقد جئتك مستغفرا لذنبي مستشفعا بك إلى ربي ثم أنشأ يقول: يا خيرَ من دُفنَت بالقاع أعظُمُه ... فطاب منْ طيبهنّ القاعُ والأكَمُ ... نَفْسي الفداءُ لقبرٍ أنت ساكنُه ... فيه العفافُ وفيه الجودُ والكرمُ ... ثم انصرف الأعرابي فغلبتني عيني، فرأيت النبي صلى الله عليه وسلم في النوم فقال: يا عُتْبى، الحقْ الأعرابيّ فبشره أن الله قد غفر له. (تفسير ابن كثير)
அல்உத்பீ (ரளி) அவர்கள் அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களின் மண்ணறைக்கு அருகில் அமர்ந்திருந்தேன். அப்போது ஒரு கிராம அரபி வந்தார். நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறிவிட்டு இந்த வசனத்தை (4:64) ஓதினார். மேலும், 'இப்போது நான் என் பாவங்களுக்காக இறைவனிடம் மன்னிப்புக் கோரி உங்கள் சமுகம் வந்துள்ளேன். நீங்கள் என் இறைவனிடம் பரிந்துரைக்க வேண்டும்' என்று கூறிவிட்டு பின்வரும் கவிதைகளையும் பாடினார்.
மண்ணில் புதைக்கப்பட்டவர்களில் சிறந்தவரே!
உங்கள் எலும்புகளின் நறுமணத்தால்
மண்ணும் மலைக்குன்றும் மணம் கமழ்கின்றன.
நீங்கள் துயிலுறும் இந்த மண்ணரைக்கு என் உயிர் அர்ப்பணம்!
தன்னடக்கம் இங்குதான் அடங்கியிருக்கிறது
தயாள குணமும் பெருந்தன்மையும் இங்குதான் உறங்குகின்றன.
பின்பு அந்த கிராமப்புற அரபி சென்றுவிட்டார். நான் அயர்ந்து உறங்கினேன். கனவில் நபி (ஸல்) அவர்களைக் கண்டபோது, அவர்கள் என்னிடம், 'அல்உத்பீ! அந்த கிராமவாசியிடம் சென்று அவருடைய பாவங்களை அல்லாஹ் மன்னித்துவிட்டான் என்று நற்செய்தி கூறும்!' என்று சொன்னார்கள். (இப்னு கஸீர்)
கப்ரிலிருந்தே மன்னிப்பு வழங்கல்
عن علي قال: قدم علينا أعرابي بعد ما دفنا رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بثلاثة أيام، فرمى بنفسه على قبر رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وحثا على رأسه من ترابه، فقال: قلت يا رسول الله فسمعنا قولك، ووعيت عن الله فوعينا عنك، وكان فيما أنزل الله عليك (وَلَوْ أَنَّهُمْ إِذْ ظَلَمُوا أَنْفُسَهُمْ) الآية، وقد ظلمت نفسي وجئتك تستغفر لي. فنودي من القبر أنه قد غفر لك. (تفسير القرطبى)
அலி (ரளி) அறிவிக்கிறார்கள்: 'நபி (ஸல்) அவர்களை அடக்கம் செய்து மூன்று நாட்கள் கழிந்தபிறகு ஒரு கிராம அரபி வந்து, நபி (ஸல்) அவர்களின் கப்ரின் மீது விழுந்தார். தலையில் மண் படிந்திருந்தது. 'யாரஸுலல்லாஹ்! உமது சொல்லுக்கு கட்டுப்பட்டுள்ளேன். அல்லாஹ் இறக்கி அருளிய (4:64) வசனத்தை உங்கள் மூலம் கேட்டுள்ளேன். எனக்கு நானே அநீதி இழைத்துக்கொண்டுவிட்டேன். ரப்பிடத்தில் எனக்காக தாங்கள் மண்ணிப்பு கோரவேண்டும் என்று (இதோ!) இப்போது உங்கள் தருபாருக்கு வந்துள்ளேன். எனக்காக மண்ணிப்பு கோருவீராக! என்றார். அப்போது, உமது பாவம் மண்ணிக்கப்பட்டது என்று நபி (ஸல்) அவர்களின் ரவ்ளாவி(மண்ணரையி)லிருந்தே சப்தம் வந்தது.' (தஃப்ஸீர் குர்துபி)
ஸலவாத்தை காதால் கேட்கும் (ஸல்)
عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ' مَنْ صَلَّى عَلَيَّ عِنْدَ قَبْرِي سَمِعْتُهُ، وَمَنْ صَلَّى عَلَيَّ نَائِيًا أَبْلَغْتُهُ ' (بيهفى فى شعب الايمان-1481)
எவரேனும் என் ரவ்ளாவு(மண்ணரை)க்கு அருகில் இருந்துக்கொண்டு என்மீது ஸலவாத் ஓதினால் அதை நான் என் காதால் கேட்கிறேன். எவரேனும் தூரத்தில் இருந்துக்கொண்டு என்மீது ஸலவாத் ஓதினால் அது எனக்கு எத்திவைக்கப்படுகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.' (பைஹகி-ஷுஃபில் ஈமான்-1481)
அண்ணல் அவர்களின் மறைவுக்கு வெகு காலத்திற்குப்பின் சுலைமான் பின் ஸஹீம் (ரஹ்) அவர்கள் அண்ணலெம் பெருமான் (ஸல்) அவர்களைக் கனவில் கண்டு, 'நயகமே! தங்களின் ரவ்ளா ஷரீஃபின் முன் நின்று தங்களுக்கு ஸலவாத்தும் ஸலாமும் சொல்வதைத் தாங்கள் செவியுறுகின்றீர்களா?' என்று வினவிய பொழுது 'ஆம்! நான் அவற்றைச் செவியுற்று அவர்களின் ஸலாத்திற்குப் பதில் உரைக்கிறேன்' என்று அவர்கள் மறுமொழி பகர்ந்தார்கள்.
காயல் தந்த மேதை தைக்கா ஸாஹிப் வலி அவர்கள் எம்பெருமானார் (ஸல்) அவர்களின் ரவ்ளா ஷரீஃபின் முன் நின்று தாம் இயற்றிய 'அஹ்மதுல்லாஹல் வலீ' என்று துவங்கும் செய்யுளை உருக்கத்துடன் பாடிய பொழுது எம்பெருமானார் (ஸல்) அவர்கள் திருத்தோற்றம் வழங்கி அவர்கள் வேண்டிக் கொண்ட வண்ணம் தம் முகத்தை அவர்களின் முகத்தோடு சேர்த்து முத்தமிட்டார்கள் என்றும் எனவேதான் இச்செய்யுளைப் பாடும்பொழுது மக்கள் தாழ்மையுடன் எழுந்து நிற்கின்றார்கள் என்றும் கூறப்படுகிறது. (நூல்: நபி ஸலவாத்தின் நற்பலன்கள்)
ஜியாரத் செய்பவர் நபியை சந்தித்தவராகிறார்
وعن ابن عمرஇ 'من حج فزار قبري بعد موتي كان كمن زارني في حياتي' . (بيهقي في شعب الإيمان-3855)
இப்னு உமர் (ரளி) அறிவிக்கிறார்கள்: 'ஹஜ்ஜை முடித்துவிட்டு (மதீனா வந்து) என்னை ஜியாரத் செய்பவர் என்னை உயிரோடு சந்திப்பவரைப் போலாவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினர்கள். (பைஹகி-ஷுஃபில் ஈமான்-3855)
ஸலாத்திற்கு பதில் கூறும் (ஸல்)
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَا مِنْ أَحَدٍ يُسَلِّمُ عَلَيَّ إِلَّا رَدَّ اللَّهُ عَلَيَّ رُوحِي حَتَّى أَرُدَّ عَلَيْهِ السَّلَامَ (ابوداؤد-2041) مَا مِنْ أَحَد يُسَلِّم عَلَيَّ إِلَّا أَرُدّ عَلَيْهِ السَّلَام لِأَنِّي حَيّ أَقْدِر عَلَى رَدّ السَّلَام وَقَوْله حَتَّى أَرُدّ عَلَيْهِ (عون المعبود شرح لابى داؤد) قَالَ السُّيُوطِيُّ: وَلَيْسَ الْمُرَاد بِرَدِّهَا عَوْدهَا بَعْد مُفَارَقَة بَدَنهَا وَإِنَّمَا النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ بِالْبَرْزَخِ مَشْغُول بِأَحْوَالِ الْمَلَكُوت مُسْتَغْرِق فِي مُشَاهَدَته تَعَالَى كَمَا هُوَ فِي الدُّنْيَا بِحَالَةِ الْوَحْي. (عون المعبود)
எவரேனும் எனக்கு ஸலாம் சொன்னால், என் உயிர் எனக்கு திருப்பித் தரப்பட்டு அவரது ஸலாத்திற்கு பதில் ஸலாம் கூறுகிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூது-2041) இந்த ஹதீஸிற்கு அல்லாமா அளீம் ஆபாதி (ரஹ்) அவர்கள் விளக்கம் கூறுகையில், எவரேனும் எனக்கு ஸலாம் சொன்னால், நான் உயிரோடுதான் இருக்கிறேன். எனவே ஸலாத்திற்கு என்னால் பதில் கூறமுடியும் என்பதுதான் 'என் உயிர் எனக்கு திருப்பித் தரப்பட்டு அவரது ஸலாத்திற்கு பதில் ஸலாம் கூறுகிறேன் என்பதாகும் என்று விளக்கம் தந்துள்ளார்கள். (அவ்னுல் மஃபூது)
இமமாம் சுயூத்தி (ரஹ்) அவர்கள்: 'நபி (ஸல்) அவர்களுது முபாரக்கான ரூஹ் உடம்பைவிட்டும் பிறிவதும் பிறகு உயிர் கொடுக்கப்படுவதும் என்பது இதன் பொருளல்ல. மாறாக, அண்ணலார் (ஸல்) அவர்கள் ஆலமுல் பர்ஜக் எனும் (ஆத்ம உலகில்) மலகூத்தான காரியங்களில் உயிரோடு ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். உலகில் வஹி இறங்கும் சமயத்தில் இருந்ததைப்போலவே இறைவனோடு ஞானத்தில் மூழ்கியிருக்கிறார்கள் என்தபதாகும் என்று விளக்கம் கூறுகிறார்கள்.' (அவ்னுல் மஃபூது)
காஜா முயீனுத்தீன் ஜிஷ்தீ (ரஹ்) அவர்கள் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் அடங்கப் பெற்றிருக்கும் 'ரவ்ளா ஷரீஃபின்' முன் நின்று பின்வருமாறு நெஞ்சுருகப் பாடி ஸலாம் உரைத்தார்கள். எம்பெருமானார் (ஸல்) அவர்களுக்கு அவர்கள் ஸலாம் கூறி வாய் மூடுமுன் 'வஅலைக்குமுஸ்ஸலாம் யா ஹிந்தல் வலீ' என்று ரவ்ளா ஷரீஃபிலிருந்து பதில் வந்தது.
இப்ராஹீம் பின் பிஷார் (ரஹ்) அவர்கள் தாம் ஒரு தடவை ஹஜ் கடமையை முடித்துவிட்டு மதீனா சென்று எம்பெருமானார் (ஸல்) அவர்களின் ரவ்ளா ஷரீஃபின் முன் நின்று அவர்களுக்கு ஸலாம் உறைத்தபொழுது அங்கிருந்து 'வஅலைக்கஸ்ஸலாம்' என்று பதில் வந்ததாகக் கூறுகிறார்கள்.
தாம் பதினேழு தடவை எம்பெருமானார் (ஸல்) அவர்களின் அடக்க இடத்தை தரிசித்து எம்பெருமானார் (ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறிய பொழுது, பதினேழு தடவையும் 'வஅலைக்கஸ்ஸலாம் இப்னு ஸனான்' என்று பதில் வந்ததாக இப்னு ஸனான் அவர்கள் கூறியுள்ளார்கள்.
சுல்தானுல் ஆரிஃபீன் ஸையிதுல் அஹ்மதுல் கபீர் ரிஃபாயீ (ரஹ்) அவர்கள் மதீனாவுக்கு செல்வோரிடமெல்லாம் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறிவிடும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தனர். பின்னர் அவர்கள் ஹஜ்ஜுச் செய்ய மக்கா நகர் சென்ற பொழுது மதீனமா நகருக்கு சென்று பெருமானார் (ஸல்) அவர்களின் ரவ்ளா ஷரீஃபின் முன் நின்று அவர்களுக்கு ஸலாம் உரைத்த காலை, 'வஅலைக்குமுஸ் ஸலாம்' என்று பதில் அவ்வடக்க இடத்திலிருந்து வெளி வந்ததும் ஆங்கிருந்தோர் அனைவரும் வியப்படைந்தனர். அப்பொழுது அவர்கள் இனிய குரலெடுத்துப் கவியை அரபியில் பாடினார்கள்! இவ்வாறு நெஞ்சுருகி, நைந்துருகி ஆண்டகை அவர்கள் பாட, அண்ணெலம் பெருமானார் (ஸல்) அவர்களின் அழகு சால் வலக்கரம் திடீரென வெளிப்படவே அதனைப் பக்திப் பெருக்கில் மூழ்கிய வண்ணம் முத்தமிட்டனர் ஆண்டகை. இது கண்டு ஆங்கு நின்று கொண்டிருந்தோர்க்குத் தங்களின் கண்களையே தங்களால் நம்ப இயலவில்லை. (நூல்: நபி ஸலவாத்தின் நற்பலன்கள்)
தொழுகையின் நேரத்தை அறிவித்த நபி (ஸல்)
عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ قَالَ: لَمَّا كَانَ أَيَّامُ الْحَرَّةِ لَمْ يُؤَذَّنْ فِى مَسْجِدِ النَّبِىِّ صلى الله عليه وسلم ثَلاَثاً وَلَمْ يُقَمْ، وَلَمْ يَبْرَحْ سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ الْمَسْجِدَ، وَكَانَ لاَ يَعْرِفُ وَقْتَ الصَّلاَةِ إِلاَّ بِهَمْهَمَةٍ يَسْمَعُهَا مِنْ قَبْرِ النَّبِىِّ صلى الله عليه وسلم (دارمى -93)
ஸயீது பின் அப்தில் அஜீஸ் (ரளி) அறிவிக்கிறார்கள்: 'ஹர்ரா போர் காலகட்டத்தில், மஸ்ஜிதுன் நபவியில் மூன்று நாட்கள் பாங்கும் சொல்லப்படவில்லை, ஜமாஅத் தொழுகையும் நடைபெறவில்லை. ஸயீது பின் அல்முஸய்யப் (ரளி) அவர்கள் பள்ளிவாசலியே இருந்தார்கள். (இந்த மூன்று நாட்களாக) தொழுகையின் நேரத்தை நபி (ஸல்) அவர்களின் ரவ்ளாவி(மண்ணரையி)லிருந்து வரும் கனைப்புச் சப்தத்தை வைத்தே அறிந்துக்கொண்டார்.' (தாரமீ-93)
நபிக்கு முன்னால் சப்தத்தை உயர்த்தாதீர்!
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَرْفَعُوا أَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِيِّ وَلَا تَجْهَرُوا لَهُ بِالْقَوْلِ كَجَهْرِ بَعْضِكُمْ لِبَعْضٍ أَنْ تَحْبَطَ أَعْمَالُكُمْ وَأَنْتُمْ لَا تَشْعُرُونَ (القرآن 49:2)
قال القاضي أبو بكر بن العربي: حرمة النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ميتا كحرمته حيا. (تفسير القرطبى)
அல்லாஹ் கூறுகிறான்: 'மூஃமின்களே! உங்களுடைய சப்தத்தை நபியுடை சப்தத்திற்கு மேல் உயர்த்தாதீர்கள். உங்களில் சிலர் சிலருடன் இரைந்து பேசுவது போன்று, சொற்களில் அவரிடம் இரைந்தும் பேசாதீர்கள். (ஏனெனில் இவற்றால்) நீங்கள் அறிந்து கொள்ளாத நிலையில், உங்களுடைய நற்செயல்கள் அழிந்துவிடும். (அல்குர்ஆன் 49:2) காளி அபூபக்கர் பின் அல்அரபி (ரஹ்) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஹயாத்தில் இருக்கும்போது என்ன மரியாதை செய்தோமோ அதே மரியாதை அவர்களின் வஃபாத்திற்கு பிறகும் அவர்களுக்கு தரப்படவேண்டும் என்று இந்த வசனத்திற்கு விளக்கம் கூறியுள்ளார்கள். (தஃப்ஸீர் குர்துபி)
நபியவர்கள் உயிரோடுதான் இருக்கிறார்கள்
وعن أبي الدرداء قال: قال رسول الله صلى الله عليه وسلم: ' أكثروا الصلاة علي يوم الجمعةفإنه مشهود تشهده الملائكة وإن احدا لن يصلي علي إلا عرضت علي صلاته حتى يفرغ منها' قال: قلت: وبعد الموت؟ قال: ' إن الله حرم على الأرض أن تأكل أجساد الأنبياء فنبي الله حي يرزق' . (رواه ابن ماجه-1637)
அபுத்தர்தா (ரளி) அறிவிக்கிறார்கள்: 'வெள்ளிக்கிழமை என் மீது ஸலவாத் ஓதவதை அதிமாக்கிக்கொள்ளுங்கள்¢ ஏனெனில் அது எனக்கு மலக்குகளால் எடுத்துக்காட்டப்படுகிறது. ஒருவர் என் மீது ஸலவாத் ஓதி முடிப்பதற்குள் அது எனக்கு எடுத்துக்காட்டப்படுகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது, (அபுத்தர்தாவாகிய) நான், (நபியே!) உங்களுடைய மரணத்திற்கு பிறகும் உங்களுக்கு எடுத்துக்காட்டுப்படுகிறதா? எனக்கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், நபிமார்களின் உடலை சாப்பிடுவதை பூமிக்கு அல்லாஹ் ஹராமாக்கிவிட்டான். எனவே, அல்லாஹ்வின் நபி உயிரோடுதான் இருக்கிறார்கள், அவர்களுக்கு ரிஜ்கும் வழங்கப்படுகிறது என விளக்கம் அளித்தார்கள்.' (இப்னுமாஜா-1637)
உம்மத்தவர்களின் அமல் அண்ணலாருக்கு எடுத்துக்காட்டப்படுகிறது
عن ابن مسعود رضى الله عنه ان النبى صلى الله عليه وسلم قال: 'حياتى خيركم تحدثون ويحدث لكم ووفاتى خير لكم تعرض على اعمالكم فما رأيت من خير حمدت الله عليه وما رأيت من شر استغفرت الله لكم. (رواه البزار-845 مجمع الزوائد-14250)
இப்னு மஸ்வூது (ரளி) அறிவிக்கிறார்கள்: 'என் வாழ்வும் உங்களுக்கு நன்மையானதே நீங்கள் என்னோடு பேசினீர்கள் நான் உங்களோடு பேசிக்கொண்டிருந்தேன்¢ என் மரணமும் உங்களுக்கு நன்மையானதே. உங்கள் அமல்கள் எனக்கு எடுத்துக்காட்டப்படுகிறது. அது நல்லதாக இருந்தால் அவருக்காக அல்லாஹ்வை நான் புகழ்கிறேன். அது தீயதாக இருந்தால் உங்களுக்காக அல்லாஹ்விடம் நான் பாவமன்னிப்பு தேடுகிறேன் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள். (பஜ்ஜார்-845, மஜ்மவுஜ் ஜவாயித்-14250)
நண்பரை நண்பரோடு அழைத்துக்கொண்ட அண்ணலார் (ஸல்)
عن علي بن أبي طالب قال لما حضرت أبا بكر الوفاة أقعدني عند رأسه وقال لي يا علي! إذا أنا مت فغسلني بالكف الذي غسلت به رسول الله (صلى الله عليه وسلم) وحنطوني واذهبوا بي إلى البيت الذي فيه رسول الله (صلى الله عليه وسلم) فاستأذنوا فإن رأيتم الباب قد يفتح فادخلوا بي وإلا فردوني إلى مقابر المسلمين حتى يحكم الله بين عباده قال فغسل وكفن وكنت أول من يأذن إلى الباب فقلت يا رسول الله! هذا أبو بكر مستأذن فرأيت الباب قد تفتح وسمعت قائلا يقول ادخلوا الحبيب إلى حبيبه فإن الحبيب إلى الحبيب مشتاق. (تاريخ دمشق-ابن عساكير)
அலி (ரளி) அறிவிக்கிறார்கள்: 'அபூபக்கர் (ரளி) அவர்களுக்கு மரணம் நெருங்கிய சமயத்தில், என்னை தனது தலைமாட்டில் உட்காரவைத்துக்கொண்டு, அலியே! நான் மரணத்துவிட்டால், நபி (ஸல்) அவர்களை குளிப்பாட்டிய கையைக்கொண்டு என்னை குளிப்பாட்டி, எனக்கு வாசனைத்தூள் போட்டு, என்னை ரஸுலுல்லாஹி (ஸல்) அவர்களின் ரவ்ளாவிற்கு எடுத்துச் சென்று, (நாயகத்திற்கு அருகில் அடக்கம் செய்ய) எனக்கு அனுமதி கேட்பீராக! ரவ்ளாவின் கதவு திறக்கப்பட்டால் என்னை உள்ளே கொண்டு சென்று(அடக்கம் செய்து)விடுவீராக! இல்லையெனில் முஸ்லிம்கள் அடக்கப்படும் (பொதுக்) கப்ருஸ்தானில் அடக்கம் செய்துவிடுவீராக!. தனது அடியார்களுக்க தீர்ப்பு வழங்கும் (கியாமத் நாள்) வரை (நான் பொதுக் கப்ருஸ்தானிலியே இருந்துவிடுகிறேன்) என்றார்கள். (அவ்வாறே அபூபக்கர் ரளி அவர்கள்) குளிப்பாட்டப்பட்டு, கஃபனிடப்பட்டார்கள். பின்னர் (அலியாகிய) நானே முதலில் நபியவர்களின் ரவ்ளாவின் வாசற்படியில் (நின்றுக்கொண்டு) யாரஸுல்லாஹ்! இதோ அபூபக்கர் (ரளி) அவர்கள் உங்களோடு (அடக்கம் செய்யப்பட) அனுமதி கேட்கிறார்கள் என்றேன். உடனே அண்ணலாரின் ரவ்ளாவின் கதவைப் பார்த்தேன். கதவு திறக்கப்பட்டது. 'நண்பரை அவருடைய நண்பரோடு சேர்த்துவிடுங்கள்¢ எனெனில், நண்பர் நண்பரோடு சேருவதைத்தான் விரும்புவார் என சப்தம் வந்தது எனக்கூறினார்கள';. (தாரீக் திமஷ்க் - இப்னு அஸாகிர்)
ஈஸா அலையின் ஸலாத்திற்கு பதில் சொல்லப்போகும் ஸல்)
عن أبي هريرة قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والذي نفس أبي القاسم بيده لينزلن عيسى بن مريم إماماً مقسطاً وحكماً عدلاً فليكسرن الصليب ويقتلن الخنزير وليصلحن ذات البين وليذهبن الشحناء وليعرض المال فلا يقبله أحدث ثم لئن قام على قبري فقال يا محمد لاجبته. (مجمع الزوائد-13813இ رواه ابو يعلى-6584)
அபூஹுரைரா (ரளி) அறிவிக்கிறார்கள்: அபுல் காஸிமின் (இது நபி ஸல் அவர்களின் பெயராகும்) உயிர் யாரது கையில் இருக்கிறதோ அவனின் மீதாணையாக, 'ஈஸா (அலை) அவர்கள் (வானத்திலிருந்து) நீதமான நேர்மையான இமாமாக இறங்கி வந்து, சிலுவைகளை உடைப்பார்கள், பன்றிகளை கொல்லுவார்கள், மக்களுக்கு மத்தியில் சீர்திருத்தம் செய்வார்கள், விரோதம் குரோதம் போன்ற கசடுகளை போக்குவார்கள் மற்றும் பொருட்களை புறக்கணிப்பார்கள். அதை வாங்க ஒருவரும் (அந்நேரத்தில் ஏழைகள்) இருக்கமாட்டார்கள். இறுதியாக, என் ரவ்ளாவிற்கு வந்து, முஹம்மதே! என்று என்னை அழைத்தால், அவரது அழைப்பிற்கு நான் பதில் கூறுவேன்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (மஜ்மவுஜ் ஜவாயிது-13813, அபூயஃலா-6584)
எனவே, இந்த உலகைவிட்டும் நம் உயிர் பிறிவதற்கு முன்பாகவே, மறைந்தும் வாழும் மாநபி (ஸல்) அவர்களை பலமுறை ஜியாரத் செய்யும் பாக்கியத்தையும் அவர்களின் ரவ்ளாவிற்கு முன்நின்று அவர்கள்மீது அதிகமதிகம் ஸலவாத்தையும் ஸலாமையும் கூறும் பாக்கியத்தையும். அதைக்கொண்டு அவர்களது அன்பைப்பெற்று மறுமையில் அவர்களது திருக்கரத்தால் ஹவ்லுள் கவ்ஸர் தடாகத்திலிருந்து நீர் அருந்தும் பாக்கியத்தையும் நம் அனைவருக்கும் அல்லாஹ் வழங்கியருள்வானாக! அவர்களோடு சுவர்க்கத்தில் இருக்கும் உயர்ந்த பாக்கியத்தையும் நம்மவர்களுக்கு தந்தருள் புரிவானாக! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்.!!!
No comments:
Post a Comment