Sunday, September 10, 2017

அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்கள்

Related image




ذَلِكَ وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ (القرآن 22:32)
(ஹஜ்ஜின் வழிபாட்டு முறை) இதுவே. யார் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களைக் கண்ணியப்படுத்துகிறாரோ, நிச்சயமாக அது உள்ளங்களில் உருவாகும் இறையச்ச(த்தின் அடையாள)ம் ஆகும். (அல்குர்ஆன் 22:32)

முஜாஹித் (ரஹ்) அவர்கள், ஸஃபா-மர்வா (மலைக் குன்றுகள்), திகயாகப் பிராணி, ஹஜ்ஜில் அறுக்கப்படும் ஒட்டகங்கள் ஆகியவையே அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்கள்ஆகும் என்று கூறியுள்ளார்கள். (தஃப்ஸீர் இப்னு கஸீர்)

عن محمد بن موسى في قوله {ذلك ومن يعظم شعائر الله} قال : الوقوف بعرفة من شعائر الله وبجمع من شعائر الله والبدن من شعائر الله ورمي الجمار من شعائر الله والحلق من شعائر الله. (تفسير الدر المنثور)

முஹம்மது பின் மூஸா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (ஹஜ்ஜின் வழிபாட்டு முறை) இதுவே. யார் அல்லாஹ்வின் சின்னங்களைக் கண்ணியப்படுத்துகிறாரோ (அல்குர்ஆன் 22:32) என்ற வசனத்திலுள்ள (விளக்கம்). அரஃபாவில் தங்குவது அல்லாஹ்வின் சின்னங்களில் உள்ளதாகும்;. ஹஜ்ஜில்  (ஸலாதுல் ஜம்உ) சேர்த்து தொழுவதும் அல்லாஹ்வின் சின்னங்களில் உள்ளதாகும். குர்பானி ஒட்டகமும் அல்லாஹ்வின் சின்னங்களில் உள்ளதாகும்.; கல்லெறிவதும் அல்லாஹ்வின் சின்னங்களில் உள்ளதாகும்; (ஹஜ்-உம்ராவிற்காக) தலையை மழி(மொட்டையடி)ப்பதும் அல்லாஹ்வின் சின்னங்களில் உள்ளதாகும்.

அரஃபா நாளின் சிறப்புகள்
عن طارق بن شهاب عن عمر بن الخطاب أن رجلا من اليهود قال له يا أمير المؤمنين آية في كتابكم تقرؤونها لو علينا معشر اليهود نزلت لاتخذنا ذلك اليوم عيدا قال أي آية قال {اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا} قال عمر قد عرفنا ذلك اليوم والمكان الذي نزلت فيه على النبي صلى الله عليه وسلم وهو قائم بعرفة يوم جمعة.(بخارى-45)

தாரிக் பின் ஷிஹாப் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: யூதர்களில் ஒருவர் (கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரளி) அவர்களிடம், அமீருல் முஃமினீனே! (இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே!) நீங்கள் ஓதிக்கொண்டிருக்கும் உங்கள் வேதத்தில் ஒரு வசனம் உள்ளது. அது யூதர்களாகிய எங்கள் மீது அருளப்பட்டிருந்தால், அந்நாளை நாங்கள் ஒரு பண்டிகை நாளாக்கிக்கொண்டிருப்போம் என்றார். அதற்கு உமர் (ரளி) அவர்கள் அது எந்த வசனம்? ஏனக் கேட்டார்கள். அதற்கு அந்த யூதர், இன்று உங்களின் மார்க்கத்தை உங்களுக்கு முழுமையாக்கிவிட்டேன். உங்கள்மீது எனது  அருட்கொடையை நிறைவாக்கிவிட்டேன். இஸ்லாத்தை உங்களுக்குரிய மார்க்கமாக நான் பொருந்திக்கொண்டுவிட்டேன். (அல்குர்ஆன் 5:3) (என்பதே அந்த வசனமாகும்) என்றார். அதற்கு உமர் (ரளி) அவர்கள் இந்த வசனம் எந்த நாளில் எந்த இடத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்றது என்பதை நாங்கள் அறிவோம். ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் அரஃபா பெருவெளியில் நபி (ஸல்) அவர்கள் நின்றுகொண்டிருக்கும்போதுதான் (இவ்வசனம் அருளப்பெற்றது. அந்த நாள் எங்களுக்கு பண்டிகை நாள்தான்) என்றார்கள். (புகாரி-45) 

قالت عائشة إن رسول الله -صلى الله عليه وسلم- قال « ما من يوم أكثر من أن يعتق الله فيه عبدا من النار من يوم عرفة وإنه ليدنو ثم يباهى بهم الملائكة فيقول ما أراد هؤلاء ». (مسلم-3354)
ஆயிஷா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ், அரஃபா (துல்ஹஜ் 9 ஆவது) நாளில் அடியார்களுக்கு நரக விடுதலையளிக்கும் அளவிற்கு வேறெந்த நாளிலும் நரக விடுதலை அளிப்பதில்லை. அன்றைய தினம் அவன் (அரஃபாவிலுள்ளவர்கைள) நெருங்கி, வானவர்களிடம் அவர்களைக் குறித்துப் பெருமை பாராட்டுகிறான். இவர்கள் எதை நாடி (இங்கு குழுமி)யுள்ளார்கள்? என்று (பெருமிதத்தோடு) கேட்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்-3354)

عن عبد الله بن عمرو بن العاصي : ان النبي صلى الله عليه و سلم كان يقول ان الله عز و جل يباهي ملائكته عشية عرفة بأهل عرفة فيقول انظروا إلى عبادي آتوني شعثا غبرا. (مسند احمد-7089)

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரளி) அறிவிக்கிறார்கள்: அல்லாஹ{ தஆலா, தனது வானவர்களிடம் அரஃபா இரவில் அராஃபாவிலுள்ளவர்களைக் குறித்துப் பெருமை பாராட்டுகிறான். மேலும் அ(ந்த வான)வர்களிடம், தலைவிறிக் கோலத்தோடும் புழுதியோடும் என்னிடம் வந்துள்ள என் அடியார்களை பாருங்கள் என்று கூறுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்னது அஹ்மது-7089)

عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ جَدِّهِ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : خَيْرُ الدُّعَاءِ دُعَاءُ يَوْمِ عَرَفَةَ ، وَخَيْرُ مَا قُلْتُ أَنَا وَالنَّبِيُّونَ مِنْ قَبْلِي : لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ ، لَهُ الْمُلْكُ وَلَهُ الحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ. (ترمذى-3585)

ஆமர் பின் ஷுஐப் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: துஆக்களில் சிறந்து அரஃபா நாளின் துஆவாகும். நானும் எனக்கு முன்னால் சென்ற நபிமார்களும் கேட்ட துஆக்களில் சிறந்தது, லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர் (வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையாக யாரும் இல்லை. ஆட்சியும் புகழும் அவனுக்கே சொந்தம். அவன் அனைத்தின் மீதும் சக்திபெற்றவன்) என்பதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி-3585)

ஹஜ்-உம்ராவில் மொட்டையடிப்பத்தின் சிறப்புகள்

அப்துல்லாஹ் பின் உமர் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இறைவா! (ஹஜ்ஜில்) தலையை மழித்துக்கொள்பவர்களுக்கு நீ கருணை புரி"வாயாக! எனக்கூறினார்கள். அப்போது தோழர்கள், துதரே! முடியைக் குறைத்துக்கொள்பவர்களுக்கும் (பிரார்த்தியுங்கள்) என்றார்கள். அப்போதும் நபி (ஸல்) அவர்கள் இறைவா! தலையை மழித்துக்கொள்பவர்களுக்கு நீ கருணை புரிவாயாக எனப்பிரார்த்தித்தார்கள். உடனே தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே! முடியைக் குறைத்துக்கொள்பவர்களுக்கும் என்றனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் முடியைக் குறைத்துக்கொள்பவர்களுக்கும் (கருணை புரிவாயாக!) என்று கூறினார்கள். புகாரி-1727)

இப்னு உமர் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் தமது ஹஜ்ஜின்போது தலையை மழித்தார்கள். (புகாரி-1726)

இந்த ஹதீஸில் ஹஜ்-உம்ராவில் மொட்டை அடிப்பதற்கான ஆதாரத்தையும் அதற்கான நன்மையையும் குறித்து கூறப்படுகிறதே தவிர, காலமெல்லாம் மொட்டை அடித்துக்கொண்டு அதை சுன்னத் (நபிவழி) என்று பெருமை பேசிக்கொண்டு ஒரு கூட்டம் ஊர் ஊராக சுற்றுகிறதே அவர்களுக்கு ஆதாரம் இல்லை என்பதை தெளிவாக புறிந்துக்கொள்ள வேண்டும்.

عن عطاء أنه سئل عن شعائر الله قال : حرمات الله اجتناب سخط الله واتباع طاعته ، فذلك شعائر الله. (تفسير الدر المنثور)

அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்கள் குறித்து அதாஃ (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது, அல்லாஹ்வின் தடைகள் என்பது, அல்லாஹ்வின் கோபத்தை விட்டு தவிர்ந்து கொள்வதும், அவனுக்கு (முழுமையாக) வழிபடுவதும், இதுவே அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளதாகும் எனக் கூறினார்கள். (தஃப்ஸீர் துர்ருல் மன்ஸுர்)

فتعظيم شعائر الله واجب، تعظيم حرمات الله – عز وجل – واجب (شرح العقيدة الطحاوية)
அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களை கண்ணியப்படுத்துவது கடமையா(வாஜிபா)கும்;; அல்லாஹ்வின் தடைகளை கண்ணியப்படுத்துவதும் கடமையா(வாஜிபா)கும். (ஷரஹ் அல்அகீததுத் தஹாவிய்யா)

ஸஃபா-மர்வா அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்கள்

إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِن شَعَآئِرِ اللَّهِ (القرآن 2:158)
ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவை ஆகும். (அல்குர்ஆன் 2:158)
عن عائشة : عن النبي صلى الله عليه و سلم قال إنما جعل رمي الجمار والسعي بين الصفا والمروة لإقامة ذكر الله. (ترمذى-902)
ஆயிஷா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: கல்லறிவதும், ஸஃபா மர்வாவிற்கு இடையில் நடப்பதும் அல்லாஹ்வின் பெயரை நிலைநாட்டுவது ஆகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி-902)

عن مجاهد قال : قال إبراهيم عليه السلام : رب أرنا مناسكنا ، فاتاه جبريل فأتى به البيت فقال : ارفع القواعد ، فرفع القواعد وأتم البنيان ثم أخذ بيده فأخرجه فانطلق به إلى الصفا قال : هذا من شعائر الله ثم انطلق به إلى المروة فقال : وهذا من شعائر الله. (تفسير الدر المنثور)

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இறைவா! எங்களது  வழிபாட்டு முறையை காட்டித்தருவாயாக! என்று நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் கேட்டபோது, அவர்களிடம் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் வந்து அவர்களை (அல்லாஹ்வின்) வீட்டிற்கு அழைத்துவந்து, இதை உயர்த்திக் கட்டுவீராக! என்றார்கள். கட்டிடம் உயர்த்தி கட்டப்பட்டு முழுமையடைந்தது. பிறகு என்கையைப் பிடித்துக்கொண்டு வெளியேறி ஸஃபாவிற்கு வந்து, இது அல்லாஹ்வின் சின்னங்ளில் உள்;ளதாகும் என்றார்கள். பிறகு மர்வாவிற்கு அழைத்து வந்து, இது அல்லாஹ்வின் சின்னங்களில் உள்ளதாகும் என்று (விளக்கம்) கூறினார்கள். (தஃப்ஸீர் துர்ருல் மன்ஸுர்)


عن ابن عمر : أن النبى صلى الله عليه وسلم قال للأنصارى الذى سأله عن أجر الطواف بين الصفا والمروى: "وأما طوافك بالصفا والمروة بعد ذلك كعتق سبعين رقبة. (رواه البزار-6177)
இப்னு உமர் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஸஃபா மர்வாவுக்கு இடையில் ஸயி செய்பவருக்கு என்ன நன்மை என்று ஓர் அன்சாரி தோழர் கேட்டபோது, நீர் ஸஃபா மர்வாவுக்கு இடையில் சுற்றிவருவது அதற்கு பின்னால் எழுபது அடிமைகளை உரிமைவிட்டது போலாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்னதுல் பஜ்ஜார்-6177)

الصفا والمروة بابان من الجنة وموضعان من مواضع الاجابة ما بينهما قبر سبعين الف نبى وسعيهما يعدل سبعين رقبة. (روح البيان)
ஸஃபாவும் மர்வாவும் சொர்க்கத்தின் இரு வாசல்கள் ஆகும்; துஆ அங்கரீக்கப்படும் இடங்களும் ஆகும். இந்த (ஸஃபா-மர்வா) ஆகிய இரண்டுக்கும் இடையில் எழுபதனாயிரம் நபிமார்களின் கப்ருகள் உள்ளன. அவற்றுக்கு இடையில் ஸயி (நடந்து) செல்வது எழுபது அடிமைகளை உரிமைவிடுவதற்குச்  சமமாகும்.” (தஃப்ஸீர் ரூஹுல் பயான்)

ஜாபிர் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவை என்ற (அல்குர்ஆன் 2:158) வசனத் தொடரை ஓதிய வண்ணம், ஸஃபா வாசல் வழியாக வெளியேளினார்கள். அதன் பின்னர், “அல்லாஹ் எதைக் கொண்டு தொடங்கினானோ அங்கிருந்தே நாமும் தொடங்குவோம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

عن حبيبة بنت أبي تجزأة قالت : رأيت رسول الله صلى الله عليه وسلم يطوف بين الصفا والمروة والناس بين يديه , وهو وراءهم , وهو يسعى حتى أرى ركبتيه من شدة السعي يدور به إزاره , وهو يقول ( اسعوا فإن الله كتب عليكم السعي ) (مسند احمد)
ஹபீபா பின்தி அபீதஜ்ராத் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே சுற்றிவந்ததை நான் கண்டுள்ளேன். அப்போது மக்கள் நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் இருக்க, மக்களுக்கு பின்னால் நபி (ஸல்) அவர்கள் தொங்கோட்டம் ஓடுவார்கள். அவர்களது கீழங்கி அவர்களின் காலைச் சுற்றிக்கொள்ளும் அளவிற்கு அவர்கள் கடுமையாக ஓடினால் அவர்களின் முட்டுக்கால்களை நான் காணும் நிலை ஏற்பட்டது. ஆப்போது, நீங்கள் தொங்கோட்டம் ஓடுங்கள். ஏனெனில், அல்லாஹ் உங்கள்மீது (ஸஃபா-மர்வாவுக்கிடையே) தொங்கோட்டம் ஓடுவதைக் கடமையாக்கியுள்ளான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்னத் அஹ்மது)
 
குர்பானி ஒட்டகம் அல்லாஹ்வின் அடையாளச் சின்னம்

وَالْبُدْنَ جَعَلْنَاهَا لَكُم مِّن شَعَائِرِ اللَّهِ لَكُمْ (القرآن 22:36)
குர்பானி ஒட்டகங்களை உங்களுக்காக அல்லாஹ்வின் சின்னங்களில் ஒன்றாக நாம் ஆக்கினோம். (அல்குர்ஆன் 22:32)

அவர்களுக்காக அல்லாஹ் குர்பானி ஒட்டகங்களைப் படைத்து, அவற்றைத்தன் தன்அடையாளச் சின்னங்களில் ஒன்றாக ஆக்கி, புனித ஆலயத்திற்குக் கொண்டு செல்லப்படும் பலிப்பிராணிகளாகவும் அவற்றை ஆக்கினான். ஏன், புனித ஆலயத்திற்குக் கொண்டு செல்லப்படும் பலிப்பிராணிகளில் ஒட்டங்கள்தான் மிகவும் சிறந்தவையாகும். (தஃப்ஸீர் இப்னு கஸீர்)

عن مجاهد {ذلك ومن يعظم شعائر الله} قال : استعظام البدن واستسمانها واستحسانها. (تفسير الدر المنثور)

முஜாஹித் (ரஹ்) அவர்கள், யார் அல்லாஹ்வின் சின்னங்களைக் கண்ணியப்படுத்துகிறாரோ (அல்குர்ஆன் 22:32) (என்பதற்கு விளக்கமாவது), குர்பானி ஒட்டகத்தை கண்ணியப்படுத்துவது, அதை (நன்கு) கொழுக்கச் செய்வது, (அறுக்கும்போது) அதனிடம் நல்லமுறையில் நடந்து கொள்வது என்று கூறினார்கள். (தஃப்ஸீர் துர்ருல் மன்ஸுர்)

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ لاَ تُحِلُّواْ شَعَآئِرَ اللَّهِ (القرآن 5:2)
இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களை அவமதிக்காதீர்” (அல்குர்ஆன் 5:2)

எனவே, எவற்றை எல்லாம் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்கள் என்று  இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ளதோ அவற்றை நிதானமாக படித்து மனதில் தக்கவைத்து அவற்றிற்குரிய கண்ணியத்தை தருகின்ற நன்மக்களாக நம் அனைவரையும் அல்லாஹ் ஆக்கி அருள்வானாக! அந்த அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களை காணும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் தந்து அருள்வானாக ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!!!


No comments:

Post a Comment