Wednesday, September 27, 2017

பல்துறைகளில் வணிகம் செய்தல்


அல்லாஹ் கூறுகிறான்: 'நீங்கள் பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வின் அருளைத் தேடிக் கொள்ளுங்கள்'. (அல்குர்ஆன் 62:10)
பல்துறை வணிகள் உண்டு அவற்றை எவ்வாறு கையாள்வது என்பன குறித்து இஸ்லாம் மிகத்துள்ளயமாகவே வழிகாட்டுகிறது. அவற்றில் சிலவற்றை இதோ இப்போது நாம் பார்ப்பபோம்.

நாணயமாற்று வணிகம் (Money Changer)
அபுல் மின்ஹால் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நான் நாணயமாற்று வணிகம் செய்துவந்தேன்.  அது பற்றி(ய மார்க்கச் சட்டத்தை) ஸைத் பின் அர்கம் (ரளி), பராஉ பின் ஆஸிப் (ரளி) ஆகியோரிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் இருவரும் கூறினார்கள். நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் வணிகம் செய்பவர்களாக இருந்தோம். அவர்களிடம் இந்த நாணயமாற்று வணிகம் பற்றிக் கேட்டோம். அதற்கு, உடனுக்குடன் மாற்றிக்கொண்டால் அதில் தவறில்லை” தவணையாக இருந்தால் அது கூடாது என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (புகாரி-2060)
நாணயமாற்று (Money Exchange) வணிகம் செல்லும். ஊதாரணமாக பொற்காசான தீனாரைக் கொடுத்துவிட்டு, வெள்ளிக் காசான திர்ஹத்தையோ, அல்லது அதற்கு மாற்றமாகவோ வாங்கலாம். விற்கலாம். அப்போது ஏற்றத்தாழ்வு வந்தாலும் அது செல்லும். ஆனால், ஒப்பந்தம் நடக்கும் இடத்திலேயே உடனுக்குடன் ஏற்றத்தாழ்வு வந்தாலும் அது செல்லும். துவணை சொல்லக் கூடாது. தவணை காலத்தில் நாணயங்களின் சந்தை மதிப்பு உயரவோ தாழவோ இடமுண்டு என்பதே காரணம். அதனால் விற்றவர், வாங்கியவர் இருவரில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. இன்று உலகில் எந்த நாட்டு நாணயமும் பொன்னாலோ வெள்ளியாலோ தயாரிக்கப்படுவதில்லை. வேறு உலோகங்களாலேயே தயாரிக்கப்படுகின்றன. பெரும்பாலும் தாள்களே (Currency Note) நாணயமாகப் பயன்படுகின்றன. ஒவ்வொரு நாட்டு நாணயத்திற்கும் ஒரு விலைமதிப்பு உண்டு. அதன்படி கூடுதல், குறைவாக மாற்றுவதில் குற்றமில்லை. இவற்றின் விலை மதிப்புதான் முக்கியமே தவிர, தாள்களின் எண்ணிக்கை முக்கியமல்ல.
எனவே, ஒரு அமெரிக்க டாலரை கொடுத்துவிட்டு, ஐம்பது இந்திய ரூபாயைப் பெறுவது, (அல்லது 4.5 மலேஷிய வெள்ளியைப் பெறுவது) வட்டியாகாது. அவ்வாறே நூறு ரூபாய் (அல்லது வெள்ளி) ஒன்றைக் கொடுத்துவிட்டு, பத்து பத்து ரூபாய் (வெள்ளி) நோட்டுகளை (சில்லரை) மாற்றுவதும் செல்லும். ஆனால், விலை மதிப்பைவிடக் கூடுதலாக 11 பத்து ரூபாய் (வெள்ளி) நோட்டுகளைப் பெறுவது கூடாது. (தக்மிலா)

நமது மலேஷியா திருநாட்டில் சிறந்து விளங்குகின்ற வணிகத்தில் கொடிகட்டி பறக்கும் வணிகம், நாணய மாற்று வணிகம் (Money Exchange) என்று சொன்னால் மிகையாகாது. எனவே, அந்த வணிகத்தைக்குரித்து இந்த நபிமொழி தெளிவானதோர் விளக்கத்தைத் தருகிறது. அதுமட்டுமல்ல நாணய மாற்று வணிகம் குறித்தும் இஸ்லம் கூறியுள்ளது நாணயமாற்று வணிகர்களுக்கு கிடைத்த அங்கீகாரம் என்றே சொல்லலாம்.
உமர் (ரளி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களது காலத்தில் (வெளியே சென்று) சந்தைகளில் நான் வணிகம் செய்து கொண்டிருந்தேன். (புகாரி-2062)

கடல்வழி(ப் பயணம் மேற்ககொண்டு) வணிகம் செய்தல்
(நபியே!) கடலைக் கிழித்துக்கொண்டு கப்பல்கள் செல்வதை நீர் காண்கிறீர். அவனது அருளை நீங்கள் தேடிக்கொள்வதற்காகவும் நீங்கள் நன்றி செய்வதற்காகவுமே (இதையெல்லாம் உங்களுக்கு அல்லாஹ் வசப்படுத்திக் கொடுத்துள்ளான்). (அல்குர்ஆன் 16:14)

(இவ்வசனத்தில் 'கப்பல்கள்' என்பதைக் குறிக்க) 'அல்ஃபுல்க்' எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. ஒருமை-பன்மை இரண்டும் (கப்பல்-கப்பல்கள்) இச்சொல்லே பயன்படுகிறது.

ஆர்பரிக்கும் கடல்: கடலைத் தன் அடியார்களுக்குப் பணியச்செய்து, அதில் அவர்கள் பயணம் மேற்கொள்வதை எளிதாக்கியுள்ளதையும், கடலில் தூய முத்துக்களையும் விலைமதிப்பற்ற கற்களையும் படைத்துவைத்திருப்பதையும் தனது அருட்கொடை என அல்லாஹ் வர்ணிக்கின்றான். ஆழ்கடலில் இருந்து அவற்றை எடுத்து ஆபரணமாக அணிந்துகொள்ள அவர்களுக்கு அவன் ஆவனசெய்கிறான்.

கடலைக் கிழித்துச் செல்லும் கப்பல்கள் நீரில் மிதந்துசெல்ல ஏதுவாகக் கடலைத் தன் அடியார்களுக்கு அல்லாஹ் வசமாக்கியுள்ளான்.
நூஹ் (அலை) அவர்கள்தான் முதன் முதலில் கப்பலில் பயணம் செய்தவர்கள் ஆவார். கப்பல் கட்டும் தொழில் அன்னாருக்குத் தெரிந்திருந்தது. பின்னர் அவரிடமிருந்தே மக்கள் தலைமுறை தலைமுறையாக அத்தொழிலை மேற்கொண்டார்கள். ஓர் ஊரிலிருந்து மற்றோர் ஊருக்கு, ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு அங்குள்ள வாழ்வாதாரங்களைத் தேடி பயணித்தார்கள்.

கி.மு. 30 - ஆம் நூற்றாண்டிலேயே இறைத்தூதர் (நூஹ்) அவர்கள் (Nova) மரக்கலம் உருவாக்கி நீர்வழிப் போக்குவரத்தைத் தொடங்கி வைத்தார்கள். அறிவியல் ரீதியாக கி.மு. 3 - ஆம் நூற்றாண்டில்தான் மிதக்கும் தன்மை பற்றிக் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னரே மிதவைகள் பற்றிய அறிவியல்பூர்வ வளர்ச்சி ஏற்பட்டது. நீரில் சில பொருட்கள் மிதக்கும்; வேறுசில பொருட்கள் அமிழ்ந்துவிடும். இதற்கு மிதப்புத் தன்மையே காரணம்.

ஒரு பொருள் திரவத்தினுள் போடப்பட்டால் அது, அப்பொருளால் இடம்பெயரச் செய்யப்பட்ட நீரின் எடைக்குச் சமமான உந்து விசையுடன் மேல்நோக்கிக் தள்ளப்படும். எனவே, ஒரு பொருள் மிதக்குமா; அல்லது மூழ்குமா என்பது அப்பொருள் இடம்பெயரச்செய்த திரவத்தின் எடையைப் பொறுத்தே அமையும். ஒரு சிறு இரும்புக் குண்டு நீரில் மூழ்கிவிடும்; ஆனால், அதே உலோகத்தால் உருவாக்கப்படும் கப்பல் நீரில் மிதக்கும். இது இறைவனின் பேராற்றலுக்கு வலுவான சான்றாகும்.
இந்த மிதக்கும் தன்மை விதி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு மனிதர்கள் மற்றும் சரக்குகளின் போக்குவரத்திற்குத் தேவையான பெரிய படகுகளும் கப்பல்களும் கட்டுவது சாத்தியமாயிற்று.

கைத்தொழிலும் உழைப்பும் உயர்வு தரும்
ஆயிஷா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அபூபக்கர் (ரளி) அவர்கள் கலீஃபாவாக (ஆட்சியாளராக) ஆனபோது 'எனது தொழில் என் குடும்பத்தாரின் செலவுக்குப் போதுமானதாகும் என்று கூறினார்கள்'. (புகாரி-2070)

ஆயிஷா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் பலர் சுயதொழில் செய்(து உண்)பவர்களாக இருந்தனர். இதனால் அவர்களிடம் (வியர்வை) வாடை வீசும். இதன் காரணமாக, 'நீங்கள் குளிக்கக் கூடதா?' என்று அவர்களிடம் கூறப்பட்டது. (புகாரி-2071)

பொருளீட்டுவதற்கான அடிப்படை துறைகள் மூன்று. வேளாண்மை, வணிகம், தொழில். இவற்றில் எது சிறந்த துறை? என்பது தொடர்பாகக் கருத்து வேறுபாடு காணப்படுகிறது. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரணங்களால் சிறந்தவைதான் என்பதே சரியான கருத்தாகும்.

வேளாண்மையில் விவசாயி உழைக்கிறார்; நல்ல மகசூலுக்காக இறைவனை நம்பியிருக்கிறார்; விளைச்சல் மூலம் மனிதர்களும் இதர உயிரினங்களும் பயனடைகின்றன.
வணிகத்திலும் வணிகரின் உழைப்பு, நுகர்வோரின் தேவை நிறைவு, பண்டமாற்றுக்கான வாய்ப்பு ஆகியவை உள்ளன.

தொழில் துறையில், குறிப்பாகக் கைத்தொழிலில், உழைப்பு ஒன்று மட்டுமே மூலதனமாக உள்ளது. ஹராமான மூலதனம் கலக்காத சம்பாத்தியமாக அது இருக்கிறது. இறைத்தூதர்கள் பலர் கைத்தொழில் செய்தே சம்பாதித்தார்கள். நபி ஸகரிய்யா (அலை) அவர்கள் தச்சுத் தொழில், நபி தாவூது (அலை) அவர்கள் கவசத் தொழில், நபி இத்ரீஸ் (அலை) அவர்கள் தையல் தொழில் செய்துவந்தார்கள். (ஃபத்ஹுல் பாரி, ஃபைளுல் கதீர்)

அல்லாஹ் கூறினான்: 'இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்த நல்ல பொருட்களிலிருந்து (நல்வழியில்) செலவிடுங்கள்'. (அல்குர்ஆன் 2:267)

ஆயிஷா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு பெண், தனது வீட்டிலுள்ள உணவைப் பாழ்படுத்தாமல், (பசித்தவர்களுக்குத்) தர்மம் செய்தால், (அப்படி) தர்மம் செய்ததற்காக அவளுக்குரிய நற்பலன் அவளுக்குக் கிடைக்கும். (அந்த உணவை) சம்பாதித்ததற்காக அவளுடைய கணவனுக்கும் நற்பலன் உண்டு. கருவூலப் பொறுப்பாளருக்கும் (செலவிட உதவியதற்காக) அதுபோன்ற (நற்பலன்) கிடைக்கும். அவர்களில் ஒருவர் மற்றவரின் நற்பலனில் எதனையும் குறைத்துவிடமாட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி-2065)

விற்போரும் வாங்வோரும் பெருந்தன்மையோடு நடந்துகொள்ளல்
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: வாங்கும்போதும் விற்கும்போதும் உரிமையை நிறைவேற்றக் கோரும்போதும் பெருந்தன்மையோடு நடந்துகொள்ளும் மனிதருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி-2076)

இன்று உலகில் பார்க்கிறோம். ஒரு பொருளை பார்த்துவிட்டு அது பிடிக்கவில்லை என்று வைத்துவிட்டால் விற்பவர் கோபப்படுகிறார்; அப்படி வாங்குபவருக்கு பிடித்துப் போய்விட்டால் அதை அடைவதற்கு நீண்டநேரம் பேரம் பேசுவதை காணலாம்.

உக்பா பின் ஆமிர் (ரளி) அவர்கள், 'விற்பனை செய்யும் பொருளில் குறை இருப்பதை அறிந்திருக்கின்ற எவரும் அதைத் தெளிவுபடுத்தாமல் விற்பது ஹலால் (அனுமதிக்கப்பட்டது) அல்ல' என்று கடுமையாக ஆட்சேபித்தார்கள். (புகாரி-2078)

ஹகீம் பின் ஹிஸாம் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: விற்பவரும் வாங்குபவரும் (அவ்விடத்திலிருந்து) பிரியாமலிருக்கும் வரை (வியாபாரத்தை முறித்துக்கொள்ளும்) உரிமை உண்டு. அவ்விருவரும் உண்மை பேசி(க் குறைகளைத்) தெளிவுபடுத்தியிருந்தால், அவர்களது வணிகத்தில் வளம் (பரக்கத்) வழங்கப்படும். குறைகளை மறைத்துப் பொய் பேசியிருந்தால் அவர்களின் வணிகத்தில் உள்ள வளம் (பரக்கத்) அகற்றப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி-2082)

வணிகமும் வட்டியும்
அல்லாஹ் கூறினான்: 'இறை நம்பிக்கை கொண்டோரே! பன்மடங்காகப் பல்கிப் பெருகும் வட்டியை நீங்கள் உண்ணாதீர்கள்'. (அல்குர்ஆன் 3:130)

அல்லாஹ் கூறினான்: வட்டி உண்போர், ஷைத்தான் தீண்டியதால் பைத்தியம் பிடித்தவன் எழுவதைப் போலன்றி (மறுமை நாளில்) எழமாட்டார்கள். (அல்குர்ஆன் 2:275)
வட்டி உண்போர் மறுமை நாளில் தங்களுடைய கப்றுகளிலிருந்து எழும்போது, ஷைத்தான் தாக்கியதால் பித்தம் பிடித்தவன் எழுவதைப் போன்று வெறுக்கப்படும் நிலையிலேயே எழுவார்கள்.

அறியாமைக் கால வட்டிகள் அனைத்தும் என் பாதங்களுக்குக் கீழே புதைக்கப்படுகின்றன என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ)
இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: வட்டி உண்பவன் மறுமை நாளில் மூச்சுத் திணறிய நிலையில் பைத்தியக்காரனாக எழுப்பப்படுவான். மேலும், (இறைவனுடன்) போர் புரிவதற்காக உன் ஆயுதத்தை எடுத்துக்கொள் என வட்டி உண்போரிடம் மறுமை நாளில் சொல்லப்படும் என்று கூறிவிட்டு, இந்த (2:275) வசனத்தை ஓதிக் காட்டினார்கள். (தஃப்ஸீர் இப்னுகஸீர்)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் விண்ணுலகப் பயணம் மேற்கொண்ட இரவில் ஒரு கூட்டத்தாரிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். அவர்களின் வயிறுகள் வீடுகளைப் போன்று (பெரிதாக) இருந்தன. அவற்றில் பாம்புகள் காணப்பட்டன. அவை வயிற்றுக்கு வெளியிலிருந்து வந்து போய்க்கொண்டிருந்தன. அப்போது நான் 'ஜிப்ரயீலே! இவர்கள் யார்?' என்று கேட்டேன். அவர், 'இவர்கள் வட்டி உண்டவர்கள்' என்று கூறினார்கள். (முஸ்னது அஹ்மது, இப்னுமாஜா)

சமுரா பின் ஜுன்துப் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: '(கனவில்) நாங்கள் ஆறு ஒன்றை அடைந்தோம். அந்த ஆறு இரத்தத்தைப் போன்று சிவப்பு நிறத்தில் இருந்தது. அந்த ஆற்றில் ஒருவர் நீந்திக்கொண்டிருந்தார். ஆற்றின் கரையோரத்தில் மற்றொருவர் நின்றுகொண்டிருந்தார். அவர் அதிக அளவில் கற்களைத் தன்னிடம் சேர்த்துவைத்திருந்தார். ஆற்றில் நீந்தும் அந்த மனிதரை, கரையில் நின்றிருக்கும் மனிதரை நோக்கி வந்து வாயைத் திறக்கிறார். இவர் அவரது வாயில் கற்களைப் போடுகிறார். இவர் யார் என்று கேட்டபோது, வட்டி உண்டவர் என்று நபி (ஸல்) அவர்கள் விளக்கமளிக்கப்பட்டது'. (புகாரி-1386)

ஏழு பேரழிவுகளிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள் என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே நபித்தோழர்கள், அவையாவைஎனக் கேட்டார்கள். அதற்கு அண்ணலார் (ஸல்) அவர்கள், 1. அல்லாஹ்வுக்கு இணைவைத்தல் 2. சூனியம் செய்வது 3. படுகொலை செய்வது 4. வட்டியைப் புசிப்பது 5. அநாதையின் பொருளை உட்கொள்வது 6. அறப்போரின் போது களத்திலிருந்து வெருண்டோடுவது 7. ஒழுக்கமான பெண்கள் மீது அவதூறு செய்வது எனக் கூறினார்கள். (புகாரி-முஸ்லிம்)

ஜாபிர் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: வட்டி உண்பவர், பெறுபவர், அந்த கணக்கை எழுதுபவர், மற்றும் அதற்கு சாட்சியாக இருப்பவர் அனைவரையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள். மேலும், இவர்கள் அனைவரும் (தவற்றில்) சமமானவர் என்றும் கூறினார்கள். (முஸ்லிம் - 1587)

'வட்டி' என்பதைக் குறிக்க வசனத்தில் 'அர்ரிபா' எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு 'கூடுதல்', 'வளர்ச்சி' ஆகிய பொருள்கள் அகராதியில் காணப்படுகின்றன. மக்களது வழக்கில் இச்சொல் வட்டியை (ரளரசல) குறிக்கும். வட்டி இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டது என்பதில் கருத்து வேறுபாடு கிடையாது. தடை செய்யபட்ட வட்டியை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

தவணை வட்டி (ரிபந் நஸீஆ), கொடுத்த கடன் தொகையைவிடக் கூடுதல் தொகை பெறுவதே 'தவணை வட்டி' ஆகும். அதாவது, குறிப்பிட்ட தவணையில் கடன் (அசல்) தொகையைவிடக் கூடுதலான தொகையைப் பெறுவதாகும். இது முந்தைய மார்க்கங்களிலும் தமை செய்யப்பட்டே இருந்தது. குர்ஆனும் இதற்குத் தடை விதிக்கிறது.

1. வங்கியில் வட்டி கடன் பெறும் ஏழை ஒருவன் மருத்துவச் செலவு, படிப்புச் செலவு, குடும்பச் செலவு போன்ற அவசியத் தேவைகளுக்காகவே கடன் வாங்குகிறான். அவனிடம்போய் அசலையும் கொடு; கூடுதலாக ஒரு தொகையை வட்டியாகவும் கொடு என்று கேட்பது எவ்வளவு பெரிய கொடுமை! மனிதாவிமானமற்ற இந்தச் செயலை மனித உள்ளம் படைத்த எவரும் ஆதரிக்கமாட்டார்கள். வசதி படைத்தவர்களும் வட்டிக்குக் கடன் வாங்குவது உண்டு. புதிய தொழில் ஆரம்பிக்க, பழைய தொழிலில் முதலீடு செய்ய எனப் பல நோக்கங்களுக்காக அவர்களுடன் கடன் வாங்குகிறார்கள். இந்த முதலைப் போட்டு அவர்கள் அடையும் இலாபத்தில் ஒரு பங்கை வட்டியாக வங்கிக்குச் செலுத்துவதால் அவர்களுக்கு என்ன பாதிப்பு என்று சிலர் கேட்கலாம்.

உண்மை அதுவன்று. கடன் கொடுத்த வங்கி இலாபத்தில் பங்கு கேட்கும் அதே வேளையில், நஷ்டம் ஏற்பட்டால் அதையும் பகிர்ந்துகொள்ள வேண்டுமல்லவா? யாரும் அப்படிச் செய்வதில்லை. இது என்ன நியாயம்? கடன் கொடுத்தவர் இலாபம், நஷ்டம் இரண்டிலும் ஒரு பங்கு பெறத் தயாராக இருந்தால், கூட்டு வியாபார அடிப்படையில் அதைச் செய்யலாமே! அதை விடுத்து, வட்டிக்கு ஏன் கடன் கொடுக்க வேண்டும்?

2. வட்டியின் இரண்டாவது வகை, ஏற்றத்தாழ்வு வட்டி (ரிபல் ஃபள்ல்). ஒரே இணத்தைச் சேர்ந்த இரு வகைப் பொருட்களைப் பண்டமாற்றம் செய்துகொள்ளும்போது கூடுதலாகப் பெறுவதே ‘’ஏற்றத்தாழ்வு வட்டி’’ எனப்படும்.
ஆக, வட்டி முறையில் ஏராளாமான பாதிப்புகளும் தவறுகளும் நடக்கின்றன. உழைப்பே இல்லாமல் பணம் சேர்த்தல், வசதி படைத்தவர்களிடம் மட்டுமே செல்வம் குவிதல், சந்தையின் இயல்பான போக்குத் தடைபடல், பணம் கொடுத்தவர்களுக்கு வறியவர்கள் அடிமை ஆகுதல், ஈவிரக்மில்லாத முறைகளில் வட்டி வசூல், வட்டி கட்ட முடியாமல் மானத்துக்குப் பயந்து தலைமறைவு ஆவது அல்லது தற்கொலை செய்துகொள்வது எனப் பல சமூகத் தீமைகள் வட்டியை அனுமதிப்பதால் சட்ட அங்கீகாரம் பெறுகின்றன. இஸ்லாம் இந்தக் கொடுமைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தது; வட்டிக்கு தடை விதித்தது. (தக்மிலா)
அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘’வட்டி வாங்குபவரையும் வட்டி கொடுப்பவரையும் அதன் இரு சாட்சிகளையும் அதற்கு கணக்கு எழுதுபவரையும் சபித்தார்கள்’’. (திர்மிதி-1127)

வட்டி தொழில் தடை செய்யபட்டதாகும் என்பதற்கு இந்த நபிமொழி தெளிவான ஆதாரமாகும். இதிலிருந்து வட்டி வங்கிகளில் பணியாற்றுவது கூடாது என அறியலாம். வட்டி வங்கிகளில் பணியாற்றும் ஒருவர் வட்டிக்குத் துணைபோகின்ற எழுத்து, கணக்கு போன்ற வேலைகளை மேற்கொண்டால் இரண்டு காரணங்களுக்காக அது தடை செய்யப்பட்டதாகும். 1. வட்டித் தொழிலுக்கு துணைபோதல் 2. வட்டி எனும் ஹராமான பணத்தை ஊதியமாகப் பெறல்.

வங்கியில் பணியாற்றும் ஒருவருக்கு வட்டியுடன் தொடர்புடைய வேலை இல்லாவிட்டாலும் இரண்டாவது காரணத்துக்காக அதுவும் குற்றமே. எந்த வங்கியின் வருமானத்தில் பெரும்பாலானது அனுமதிக்கப்பட்ட (ஹலால்) வகையைச் சேர்ந்ததாக இருக்கிறதே, அந்த வங்கியின் வட்டியுடன் தொடர்பில்லாத பணிகளைச் செய்யலாம். (தக்மிலா)


No comments:

Post a Comment