وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًا مِنْ قَبْلِكَ وَجَعَلْنَا
لَهُمْ أَزْوَاجًا وَذُرِّيَّةً. (القرآن 13:38)
(நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னரும், நாம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; அவர்களுக்கும் மனைவியரையும், சந்ததிகளையும் நாம் ஏற்படுத்தியிருந்தோம். (அல்குர்ஆன் 13:38)
عَنْ أَنَسَ بْنَ
مَالِكٍ - رضى الله عنه - يَقُولُ جَاءَ ثَلاَثَةُ رَهْطٍ إِلَى بُيُوتِ
أَزْوَاجِ النَّبِىِّ - صلى الله عليه وسلم - يَسْأَلُونَ عَنْ عِبَادَةِ
النَّبِىِّ - صلى الله عليه وسلم - فَلَمَّا أُخْبِرُوا كَأَنَّهُمْ تَقَالُّوهَا
فَقَالُوا وَأَيْنَ نَحْنُ مِنَ النَّبِىِّ - صلى الله عليه وسلم - قَدْ غُفِرَ
لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ . قَالَ أَحَدُهُمْ أَمَّا
أَنَا فَإِنِّى أُصَلِّى اللَّيْلَ أَبَدًا . وَقَالَ آخَرُ أَنَا أَصُومُ
الدَّهْرَ وَلاَ أُفْطِرُ . وَقَالَ آخَرُ أَنَا أَعْتَزِلُ النِّسَاءَ فَلاَ
أَتَزَوَّجُ أَبَدًا . فَجَاءَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - فَقَالَ «
أَنْتُمُ الَّذِينَ قُلْتُمْ كَذَا وَكَذَا أَمَا وَاللَّهِ إِنِّى لأَخْشَاكُمْ
لِلَّهِ وَأَتْقَاكُمْ لَهُ ، لَكِنِّى أَصُومُ وَأُفْطِرُ ، وَأُصَلِّى
وَأَرْقُدُ وَأَتَزَوَّجُ النِّسَاءَ ، فَمَنْ رَغِبَ عَنْ سُنَّتِى فَلَيْسَ
مِنِّى » . (بخارى-5063)
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்: நபி (ஸல்) அவர்களின் துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டபோது, அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு), முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே என்று சொல்லிக்கொண்டனர். அவர்களில் ஒருவர்,
(இனிமேல்) நான் என்ன செய்யப்போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப்போகிறேன்''
என்றார். இன்னொருவர், 'நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப்போகிறேன்' என்று கூறினார். மூன்றாம் நபர் 'நான் பெண்களைவிட்டும் ஒதுங்கியிருக்கப்போகிறேன். ஒருபோதும் மணந்துகொள்ளமாட்டேன்'' என்று கூறினார். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (அந்தத் தோழர்களிடம்) வந்து,
'இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள்தாமே! அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். எனவே, என் வழிமுறையை கைவிடுகிறவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்''
என்று கூறினார்கள். (புகாரி-5063)
அண்ணலாரின் துணைவியர்கள்-11
1.
கதீஜா பின்தி குவைலித்
(ரளி) 2. சவ்தா பின்தி ஜம்ஆ
(ரளி) 3. ஆயிஷா பின்தி அபீபக்கர்
(ரளி) 4. ஹஃப்ஸா பின்தி உமர்
(ரளி) 5. உம்மு ஸலமா பின்தி
அபீ உமுய்யா (ரளி) 6. ஜுவைரிய்யா பின்தில் ஹாரிஸ் (ரளி) 7. ஜைனப் பின்தி ஜஹ்ஷ்
(ரளி) 8. ஜைனப் பின்தி குஜைமா
(ரளி) 9. உம்மு ஹபீபா பின்தி
ஜம்ஆன் (ரளி) 10. சஃபிய்யா பின்தி ஹுயைய் (ரளி) 11. மைமூனா பின்தில்
ஹாரிஸ் (ரளி) ஆவர். ஆகியோர் ஆவர்.
1.
கதீஜா பின்தி குவைலித்
(ரளி)
அன்னை கதீஜா பின்தி குவைலித்
(ரளி) அவர்கள்தான் நபி (ஸல்) அவர்களின் முதலாவது துணைவியார் ஆவார். கதீஜா (ரளி) அவர்களுடைய
நான்காவது முன்னோரான ‘குஸய்யு பின் கிலாப்’ என்பாரில் நபி (ஸல்) அவர்களின்
வமிசாவளி இணைகிறது. அன்னை கதீஜாவை நபி (ஸல்) அவர்கள் தமது 25-ஆவது வயதில் மணந்தார்கள். அப்போது கதீஜாவுக்கு வயது 40. அதற்குமுன் ஆபூஹாலா என்பவரையும், அவருக்குமுன் அத்தீக் பின் ஆயித் என்பாரையும் கதீஜா (ரளி) மணந்து
கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒருவர்பின் ஒருவராக இறந்த பிறகு நபியவர்களை மணமுடித்தார்கள்.
நபி (ஸல்) – கதீஜா (ரளி) தம்பதியருக்கு ஸைனப், ருகைய்யா, உம்மு குல்ஸூம், ஃபாத்திமா, காசிம், அப்துல்லாஹ் ஆகிய 6 குழந்தைகள் ஆவர். இவருக்கு தய்யிப்-தாஹிர் என்ற வேறு பெயர்களும் உண்டு. இவர்களில் கடைசி மூவரும் இஸ்லாத்திற்கு முன்பே சிறுவயதில் இறந்துவிட்டனர்.
மற்ற பெண் குழந்தைகள் அனைவரும் இஸ்லாத்தில் இணைந்தது மட்டுமின்றி, நபியவர்களுடன் மக்காவை துறந்து ஹிஜ்ரத்தும் செய்தார்கள். நபி (ஸல்)
அவர்களுடன் 5 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்தார்கள். (ஃபத்ஹுல் பாரி, உம்ததுல் காரீ)
قال رسول الله صلى
الله عليه وسلم: "ورزقني الله منها الولد إذ لم يرزقني من غيرها"(طبرانى
فى معجم الكبير).
கதீஜா (ரளி) அவர்கள் மூலமாகவே குழந்தைகளை எனக்கு அல்லாஹ் வழங்கினான்.
ஏனைய எந்த மனைவி மூலமும் வழங்கவில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (தப்ரானீ-முஃஜமுல்
கபீர்)
علي قال: سمعت رسول الله صلى
الله عليه وسلم يقول: "خير نسائها مريم وخير نسائها خديجة"(بخارى-3815)
அலீ (ரலி) அறிவித்தார்: (அன்று) உலகின் பெண்களிலேயே சிறந்தவர் மர்யம் ஆவார். (இன்று) உலகப் பெண்களிலேயே சிறந்தவர் கதீஜா ஆவார். என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி-3815)
قالت عائشة رضي الله عنها: "ما غرت للنبي صلى الله عليه وسلم
على امرأة من نسائه ما غرت على خديجة؛ لكثرة ذكره إياها وما رأيتها قط" (بخارى-3816).
ஆயிஷா (ரளி) அறிவித்தார்கள்: கதீஜா (ரளி) அவர்களின் மீது நான் ரோஷம் கொண்டதைப் போல் நபி (ஸல்) அவர்களின் (இதர) மனைவிமார்களில் வேறெவரின் மீதும் நான் ரோஷப்பட்டதில்லை. ஏனெனில், அவர்களை நபி (ஸல்) அவர்கள் (அடிக்கடி) நினைவு கூர்வதை நான் கேட்டு வந்தேன். என்னை நபி (ஸல்) அவர்கள் மணம் பரிந்து கொள்வதற்கு முன்பே கதீஜா இறந்து விட்டிருந்தார். மேலும், முத்து மாளிகை ஒன்று (சொர்க்கத்தில்) கதீஜாவுக்கு கிடைக்கவுள்ளது என்று அவர்களுக்கு நற்செய்தி சொல்லும்படி அல்லாஹ், நபி(ஸல்) அவர்களுக்குக் கட்டளையிட்டான். இன்னும் நபி (ஸல்) அவர்கள் ஆட்டை அறுத்து (அதன் இறைச்சியில்) சிறிது கதீஜா அவர்களின் தோழிகளிடையே அவர்களுக்குப் போதுமான அளவிற்கு அன்பளிப்பாகப் பங்கிட்டு விடுவது வழக்கம் (இதனாலெல்லாம் எனக்குள் ரோஷம் பிறந்தது.) (புகாரி-3816)
أبو هريرة رضي الله عنه قال: "أتى جبريل إلى النبي
صلى الله عليه وسلم فقال: يا رسول الله هذه خديجة قد أتت معها إناء فيه إدام أو
طعام أو شراب، فإذا هي أتتك فاقرأ عليها السلام من ربها ومنى وبشرِّها ببيت في
الجنة من قصب لا صخب فيه ولا نصب" (بخارى-3820).
அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்: (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! இதோ, கதீஜா தம்முடன் ஒரு பாத்திரத்தில் குழம்பு.. அல்லது உணவு... அல்லது பானம் எடுத்துக் கொண்டு உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். அவர் உங்களிடம் வந்தவுடன் அவருக்கு அவரின் இறைவனின் தரப்பிலிருந்தும் என் தரப்பிலிருந்தும் சலாம் கூறி அவருக்கு சொர்க்கத்தில் கூச்சல் குழப்பமோ, களைப்போ காண முடியாத முத்து மாளிகை ஒன்று தரப்படவிருப்பதாக நற்செய்தி சொல்லுங்கள்' என்று கூறினார்கள். (புகாரி-3820)
ஆயிஷா (ரலி) அறிவித்தார்: ஹாலா பின்த்து குவைலித் – கதீஜா (ரலி) அவர்களின் சகோதரி – இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வருவதற்கு அனுமதி கேட்டார். உடனே நபி (ஸல்) அவர்கள் (கதீஜா - ரலி - அவர்களைப் போன்ற குரலில் ஹாலாவும் அனுமதி கேட்ட காரணத்தால்) கதீஜா (ரலி) அனுமதி கேட்கும் விதத்தை நினைவு கூர்ந்து கவனம் மாறி, 'இறைவா! இவர் ஹாலாவாக இருக்கட்டும்' என்று கூறினார்கள். உடனே நான் ரோஷமடைந்துவிட்ட, தாடைகள் சிவந்த ஒரு குறைஷிக் கிழவியை ஏன் (எப்போது பார்த்தாலும்) நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அவருக்கு பதிலாக அவரைவிடச் சிறந்த மனைவியை உங்களுக்கு அல்லாஹ் கொடுத்துவிட்டானே (அப்படியிருக்க, இன்னும் ஏன் அவரையே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.) என்று கேட்டேன். (புகாரி-3821)
இவ்வாறு ஆயிஷா (ரளி) அவர்கள் பேசியவுடன் (நபி) அவர்கள் கோபமடைந்தார்கள்.
அப்போது,
“உங்களை சத்தியத்தைக் கொண்டு அனுப்பிய அல்லாஹ்வின் மீதாணையாக! இனி
கதீஜாவை குறித்து நல்லதை மட்டுமே கூறுவேன்” என்று ஆயிஷா (ரளி) அவர்கள்
சொன்னார்கள். (அஹ்மது, தப்ரானி)
2.
சவ்தா பின்தி ஜம்ஆ
(ரளி)
தாயார் பெயர்
ஷுமூஷ் பின்தி கைஸ். ஸவ்தா பின்த் ஜம்ஆ (ரளி), கதீஜா (ரளி)
அவர்கள் மரணமடைந்த பிறகு ஹிஜ்ரத் செல்வதற்கு முன்பாக இறந்து ஒரு மாதத்திற்குப் பின் நபித்துவத்துடைய பத்தாம் ஆண்டு ஷவ்வால் மாதத்தில்
இவர்களை நபியவர்கள் திருமணம் செய்தார்கள். ஒன்றுவிட்ட சகோதரன் மகன் சக்ரான் இப்னு அம்ருக்கு இவரை மணமுடித்து தரப்பட்டிருந்தது. அவர் மரணத்திற்குப் பின் நபி (ஸல்) ஸவ்தாவை மணமுடித்தார்கள். இவர்கள் ஹிஜ்ரி
54-ல் முஆவியா (ரளி) அவர்களது ஆட்சி காலத்தில்
மதீனாவில் மரணித்தார்கள்.
3.
ஆயிஷா பின்தி அபூபக்கர் (ரளி)
அன்னை ஆயிஷா சித்தீகா (ரளி) அவர்கள் அபூபக்கர் (ரளி) அவர்களின்
மாகளாவார். தாயார் பெயர் உம்மு ரூமான் பின்தி ஆமிர். ஹிஜ்ரத்திற்கு சுமார் 6 ஆண்டுகளுக்குமுன் மக்காவில் பிறந்த ஆயிஷா (ரளி) அவர்கள் நபி
(ஸல்) அவர்களின் துணைவியாவார். அன்னாருக்கு குழந்தை இல்லை. நபி (ஸல்) அவர்களிடமிருந்து
2210 நபிமொழிகளை அறிவித்துள்ள ஆயிஷா (ரளி), அறிவிற்சிறந்த பெண்மணியாக விளங்கினார்கள். அநேக மார்க்கச் சட்டங்கள்
அவர்களின் அறிவிப்பால் கிடைத்தவையே ஆகும். அவர்களிடமிருந்து மக்கள் நிறைய கற்றுக்கொண்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் இறக்கும்போது ஆயிஷாவுக்கு வயது சுமார் 18. நபியவர்களின் மறைவுக்கு பிறகு சுமார் 50 ஆண்டுகள் ஆயிஷா வாழ்ந்தார்கள். நபி (ஸல்) அவர்களின்
மறைவுக்குப் பின்னால் தொடர்ந்து மார்க்கக் கல்வியைப் போதித்து வந்த அன்னை ஆயிஷா (ரளி)
அவர்களிடம் விளக்கம் பெற்றவர்களின் எண்ணிக்கை 200
ஆகும். ஹிஜ்ரி 58 ஆம் ஆண்டு (கி.பி.657) ரமளான் திங்களில் முஆவியா (ரளி) அவர்களின் ஆட்சியில் அன்னை ஆயிஷா
(ரளி) அவர்கள் இறந்தார்கள். மர்வான் பின் ஹகமுக்கு பகரமாக அபூஹுரைரா (ரளி) அவர்கள்
ஜனாஸா தொழ வைத்தார்கள். (ஃபத்ஹுல் பாரி, உம்ததுல் காரீ, இர்ஷாதுஸ் ஸாரீ)
ஆயிஷா பின்த் அபூபக்ர் (ரளி) - ஸவ்தா (ரளி) அவர்களை மணமுடித்து ஓராண்டுக்குப் பின் நபித்துவத்துடைய 11 ஆம் ஆண்டு ஷவ்வால் மாதத்தில், ஹிஜ்ரத்துக்கு இரண்டாண்டுகள், ஐந்து மாதங்களுக்கு முன் ஆயிஷாவை அவரது 6 வது வயதில் மணமுடித்தார்கள். ஹிஜ்ரத் செய்து மதீனா வந்த பின் ஏழு மாதங்கள் கழித்து ஆயிஷாவின் 9 வது வயதில் அவருடன் வாழ்க்கையைத் தொடங்கினார்கள். ஆயிஷா (ரளி) மட்டுமே நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் கன்னிப் பெண்ணாக இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களை மிக அதிகம் நேசித்தார்கள். இச்சமுதாயப் பெண்களில் அவர்களே அதிக மார்க்க ஞானமுள்ளவர்களாகத் திகழ்ந்தார்கள். ஹிஜ்ரி 57 அல்லது 58 ஆம் ஆண்டு ரமழான் பிறை 17-ல் மரணமானார்கள். ஜன்னத்துல் பகீயில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.
ஆயிஷா (ரளி) கூறினார்கள்: இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள், 'ஆயிஷே! இதோ (வானவர்) ஜிப்ரீல் உனக்கு சலாம் உரைக்கிறார்' என்று கூறினார்கள். நான், சலாமுக்கு பதில் கூறும் முகமாக 'வ அலைஹிஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு' (பொருள்: அவரின் மீதும் சலாம் (இறை சாந்தி) பொழியட்டும். மேலும், அல்லாஹ்வின் கருணையும் அவனுடைய அருள் வளங்களும் பொழியட்டும்') என்று பதில் முகமன் சொல்லிவிட்டு,
'நான் பார்க்க முடியாதவற்றை நீங்கள் பார்க்கிறீர்கள்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கூறினேன். (புகாரி-3768)
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்: (உலகின் மற்ற) பெண்களைக் காட்டிலும் ஆயிஷாவுக்கு இருக்கும் சிறப்பு (மற்ற) உணவுகளைக் காட்டிலும் 'ஸரீத்' என்றும் உணவுக்கு இருக்கும் சிறப்பைப் போன்றதாகும் என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி-3770)
4.
ஹஃப்ஸா பின்தி உமர் (ரளி)
நபித்துவ ஆண்டு 5
வருடத்திற்கு முன்னால் இவர்கள் பிறந்தார்கள். தாயார் ஜைனப் பின்தி
மள்ஊன். இவரை குனைஸ் பின் ஹுதாஃபா சஹ்மி (ரளி) அவருக்கு திருமணம் முடித்து தரப்பட்டது. இவர்
பத்ர்-உஹுதுக்கு இடைப்பட்ட காலத்தில் மரணமடையவே, இவர் விதவையானார். இவரது இத்தா முடிந்து, ஹிஜ்ரத் 3-ம் ஆண்டு ஷஃபான்
மாதத்தில் இவர்களை நபியவர்கள் திருமணம் செய்தார்கள். அன்னை ஹஃப்ஸா (ரளி) ஹிஜ்ரி 45-ல், ஷஅபான் மாதம் தமது 60-வது வயதில் முஆவியா (ரளி) அவர்களது
ஆட்சிகாலத்தில் காலமானார்கள். மர்வான் அவர்கள் ஜனாஸா தொழ வைத்தார்கள். ஜன்னதுல் பகீயில்
நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.
5)
ஜைனப் பின்த் குஜைமா (ரளி)
தாயார் ஆதிகா பின்தி ஆமிர் (ரளி) இவர் ஹிலால் இப்னு ஆமிர் இப்னு ஸஃஸஆவின் குடும்பத்தைச் சார்ந்தவர். இவர் ஏழைகள் மீது அதிகம் இரக்கமும் கருணையும் உடையவராக இருந்ததால் (உம்முல் மஸாகீன்) ‘ஏழைகளின் தாய்’ எனச் சிறப்பித்துக் கூறப்பட்டார். இவரை துஃபைல் பின் ஹாரிஸ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்டிருந்தது.
அவர் விவாகரத்து செய்துவிடவே உபைதா பின் ஸாரிஸ் (ரளி) அவர்கள் திருமணம் செய்தார்கள்.
இவர் கணவர் உஹுத் போரில் ஷஹீதான பின்பு அவரை நபி (ஸல்) ஹிஜ்ரி 4-ல் மணமுடித்தார்கள். 18 மாதங்கள் மனைவியாக வாழ்ந்தார்கள். ரபீஉல் அவ்வல் மாதத்தில் தங்களது 30-வது வயதில் மரணமடைந்தார். நபி (ஸல்) அவருக்குத் தொழ வைத்து பகீஃயில் அடக்கம் செய்தார்கள். (மஆரிஃபுல் குர்ஆன்)
6)
உம்மு ஸலமா பின்தி அபூ உமைய்யா (ரளி)
இவர் அபூஸலமாவின் மனைவியாக இருந்தார். அந்தத் தம்பதியருக்கு நிறைய பிள்ளைகள் இருந்தனர். ஹிஜ்ரி 4,
ஜுமாதால் ஆகிரில் அபூ ஸலமா (ரளி) மரணமானார். உம்மு சலமா (ரலளி) அவர்கள் கூறியதாவது: "ஓர் அடியார் தமக்கு ஒரு துன்பம் ஏற்படும்போது "இன்னாலில்லாஹி வ இன்னா
இலைஹி ராஜிஊன். அல்லாஹும்மஃஜுர்னீ ஃபீ முஸீபத்தீ வ அக்லிஃப் லீ கைரம் மின்ஹா"
என்று கூறினால், அவர் துன்பம் அடைந்ததற்காக அவருக்கு
அல்லாஹ் நன்மையை வழங்கி, அதைவிடச் சிறந்த ஒன்றை அதற்கு ஈடாக
வழங்காமல் இருப்பதில்லை" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான்
கேட்டேன். (என் முதல் கணவர்) அபூசலமா (ரளி) அவர்கள் இறந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டதைப் போன்றே (இன்னா லில்லாஹி...
என்று) நான் கூறினேன். அல்லாஹ் அபூசலமாவைவிடச் சிறந்தவரான அல்லாஹ்வின் தூதரையே
எனக்கு மாற்றாக (கணவராக) வழங்கினான். (முஸ்லிம்-1675)
அதே ஆண்டு ஷவ்வால் மாதக் கடைசியில் நபி (ஸல்) உம்மு ஸலமாவை மணமுடித்தார்கள். இவர் மார்க்க ஞானமும் நுண்ணறிவும் கொண்ட பெண்ணாகத் திகழ்ந்தார்கள். அன்னை உம்மு ஸலமா (ரளி) அவர்களின் வாயிலாக
378 ஹதீஸ்கள் வரை அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்கள்
வழங்கிய சட்ட விளக்கங்களை மட்டும் திரட்டினால்,
ஒரு நூலே உருவாகிவிடும் என ஹாபிள் இப்னு கய்யூம் (ரஹ்) தெரிவித்துள்ளார்கள்.
(இஃலாமுல் முகீஈன்) இவர்கள் ஹிஜ்ரி 59 (சிலரின் கூற்றுப்படி ஹிஜ்ரி 62) தமது 84-வது வயதில் மரணமடைந்தார்கள். இவரையும் பகீஃயில் அடக்கம் செய்யப்பட்டது.
7) ஜைனப் பின்தி ஜஹ்ஷ் (ரளி)
இவர் அஸத் இப்னு குஜைமாவின் குடும்பத்தைச் சார்ந்தவர். நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனான ஜைத் இப்னு ஹாஸாவின் மனைவியாக இருந்தார். ஜைத் (ரளி) தலாக் கொடுத்து, இத்தா காலம் முடிந்தவுடன் நபி (ஸல்) அவர்களுக்கு ஹிஜ்ரி 5-ம்
ஆண்டில் அவரை அல்லாஹ் மணமுடித்து வைத்ததாக பின்வரும் வசனத்தில் கூறுகிறான். ஜைது (மணவாழ்க்கை என்ற) தேவையை
அந்தப் பெண்ணிடம் முடித்துக்கொண்டபோது அப்பெண்ணை உங்களுக்கு திருமணம் செய்து வைத்தோம். (அல்குர்ஆன் 33:37)
ஜைனப் பின்தி அல்ஜஹ்ஷ் அவர்களின் பழைய பெயர் ‘பர்ரா. நபி (ஸல்) அவர்கள்தான் ஜைனப் எனப் பெயர் சூட்டடினார்கள். ஹிஜ்ரி 5 (சிலரின் கூற்றுப்படி ஹிஜ்ரி 4, துல்கஅதா மாதம் நபி (ஸல்) ஜைனப் (ரளி) அவர்களைத் திருமணம் செய்தார்கள். இவர் அதிகம் தர்மம் செய்பவராகவும் அதிகம் வணக்கம் புரிபவராகவும் விளங்கினார். தங்களது 53-வது வயதில் ஹிஜ்ரி 20-ல் மரணமெய்தினார்கள். நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் நபியை அடுத்து மரணமெய்தியவர்களில் இவரே முதலாமவர். இவருக்கு உமர் (ரளி) தொழுகை நடத்தி பகீஃயில் அடக்கம் செய்தார்கள்.
8) ஜுவைய்யா பின்தி அல்ஹாரிஸ் (ரளி)
இவன் தந்தை ஹாரிஸ், குஜாஆ கோத்திரத்தைச் சேர்ந்த முஸ்தலக் கிளையினரின் தலைவராவார். நபி (ஸல்) பனூ முஸ்தலக் மீது படையெடுத்த போது கைதியான இவர், ஸாபித் இப்னு கைஸ் இப்னு ஷம்மாஸ் (ரளி) என்ற நபித்தோழருக்கு (கனீமத்) வெற்றிப் பொருளில் பங்காகக் கிடைத்தார். இவரைச் சில தொகைகள் பெற்றுக் கொண்டு உரிமையிட ஸாபித் முடிவு செய்தார். இவர்கள் நபி (ஸல்)
அவர்களிடம் நிதியுதவி தேடினார்கள். அத்தொகையை நபி (ஸல்) செலுத்தி விட்டு ஹிஜ்ரி 6-ம் ஆண்டில் ஷஅபானில் மணமுடித்துக் கொண்டார்கள். இத்திருமணத்தால் நபி (ஸல்) அவர்களின் மனைவியின் உறவினர்களை எங்ஙனம் அடிமையாக வைத்திருப்பது என்று எண்ணி முஸ்லிம்கள் தங்களிடம் அடிமைகளாக இருந்த நூறு பனூ முஸ்தலக் குடும்பத்தார்கள் அனைவரையும் விடுதலை செய்து விட்டனர். எனவே, தனது சமூகத்தாருக்கு அல்லாஹ்வின் அருள் பொருந்தியப் பெண்ணாக இவர் விளங்கினார். தனது 65-வது வயதில் ஹிஜ்ரி 56 (சிலரின் கூற்றுப்படி ஹிஜ்ரி 55) ரபீஉல் அவ்வல் மாதத்தில் மரணமடைந்தார். அண்ணல் நபி (ஸல்)
அவர்கள் ஜுவைரிய்யா (ரளி) அவர்களை மணந்ததின் பயனாய்,
‘பனூமுஸ்தலிக்’
கூட்டத்தாரில் 100 குடும்பங்கள் விடுதலையாயின.
தன் சமூகத்துக்குப் பெரும் பாக்கியமாக இருந்த பெண்மணி ஜுவைரிய்யாவைப் போல எவரும் இருக்க
முடியாது.
9)
உம்மு ஹபீபா பின்தி அபூஸுஃப்யான் (ரளி)
இவர் உபைதுல்லாஹ் இப்னு ஜஹ்ஷின் மனைவியாக இருந்தார். அவர் மூலம் ஹபீபா என்ற பெண் குழந்தை பிறந்ததால் உம்மு ஹபீபா என்றழைக்கப்பட்டார். இவர் தனது கணவருடன் ஹபஷா(அபிசீனியா)வுக்கு ஹிஜ்ரத் செய்து சென்றார். அங்கு உபைதுல்லாஹ் கிறிஸ்துவராக மாறினார். சில காலத்திற்குப் பின் அங்கேயே இறந்து போனார். உம்மு ஹபீபா (ரளி) இஸ்லாமில் நிலையாக இருந்தார். ஹிஜ்ரி 7-ம் ஆண்டு முஹர்ரம் மாதத்தில் அம்ர் இப்னு உமைய்யா ழம்ரீ என்ற தோழரை மன்னர் நஜ்ஜாஷியிடம் அனுப்பி, அங்குள்ள முஸ்லிம்களை அழைத்து வரச் சொன்னபோது உம்மு ஹபீபாவை மணமுடிக்கும் விஷயமாகவும் நஜ்ஜாஷியிடம் கொடுக்கப்பட்ட கடிதத்தில் நபி (ஸல்) குறிப்பிட்டிருந்தார்கள். அவர் நபி (ஸல்) சார்பாக 400 திர்ஹங்கள் மஹர் கொடுத்து உம்மு ஹபீபாவை நபி (ஸல்) அவர்களுக்கு மணமுடித்து வைத்து ‘ஷுரஹ்பீல் இப்னு ஹஸ்னா’ என்ற தோழருடன் அனுப்பி வைத்தார். இக்குழுவினர் நபி (ஸல்) கைபர் போரில் ஈடுபட்டிருந்த போது அங்கு வந்தனர். போரிலிருந்து திரும்பியபின் நபி (ஸல்) இவருடன் வாழ்க்கையைத் தொடங்கினார்கள். ஹிஜ்ரி 42-ல் இவர் மரணமெய்தினார். சிலர் ஹிஜ்ரி 44 என்றும், சிலர் 50 என்றும் கூறுகின்றனர்.
அன்னை உம்மு ஹபீபா (ரளி) அவர்கள், அபூஸுஃப்யான் (ரளி) அவர்களின் புதல்வியாவார். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹபீபாவை மணந்து கொண்ட நேரத்தில் அபூசுஃப்யான் இஸ்லாத்தின்மீதும், முஸ்லிம்களின் மீதும் கடுமையான விரோதம் பூண்டிருந்ததார்; நபி (ஸல்) அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தொல்லைகளை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புகளை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் அவரது மகளான உம்மு ஹபீபாவை அண்ணலார் மணந்து கொண்ட செய்தி அவரை வியப்பில் ஆழ்த்தியது. தன்னையும் மீறி அபூஸ{ஃப்யான் இவ்வாறு கூறினார்: “அவர் ஒரு காளை. அவரது மூக்கை நாம் எளிதில் நறுக்கிவிடமுடியாது’’.
அதாவது,
நபியை நாம் இழிவுபடுத்த முயற்சிசெய்து வருகிறோம். ஆனால் அவரோ உயர்ந்த
குணமுடைய உன்னதப் புரஷராக இருக்கிறார். நாம் அவரைக் கேவலப்படுத்த முனைந்துள்ள வேளையில்,
நாம் பெற்றெடுத்த மகள் அவரை மணந்து கொண்டு அவருடன் வாழ்கிறாள்.
எனவே முஹம்மதை இழிவுபடுத்துவது எளிதன்று. (ஜவாஹிருல் குர்ஆன்)
10) ஸஃபிய்யா பின்தி ஹுயைய் (ரளி)
இஸ்ரவேலர்களின் பனூ நழீர் கூட்டத்தாருடைய தலைவன் மகள். கைபர் போரில் கைதியானார். நாங்கள் கைபரைப் பலவந்தமாகக்
கைப்பற்றினோம். போர்க் கைதிகளெல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டபோது 'திஹ்யா' என்ற நபித்தோழர் வந்து 'இறைத்தூதா அவர்களே! கைதிகளிலுள்ள ஒரு பெண்ணை எனக்குக் கொடுங்கள்' என்று கேட்டார். 'நீர் போய் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்துக்
கொள்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர் சென்று ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணைத் தேர்ந்தெடுத்தார்.
அப்போது ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! 'குறைளா' மற்றும் 'நளீர்' என்ற குலத்தின் தலைவி ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணையா
திஹ்யாவிற்குக் கொடுத்துள்ளீர்கள். அந்தப் பெண் தங்களுக்கே தகுதியானவள்' என்றார். அப்போது 'அப்பெண்ணையும் திஹ்யாவையும் அழைத்து
வாரும்' என்று நபி (ஸல்) அவர்கள் அவரிடம் கூறினார்கள். அப்பெண் அழைத்து வரப்பட்டார்.
அப்பெண் வந்ததும் 'நீ கைதிகளிலிருந்து வேறொரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துக்
கொள்' என்ற திஹ்யாவிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அப்பெண்ணை
விடுதலை செய்து இஸ்லாமுக்கு வரும்படி அழைத்தார்கள். அவர் அதை ஏற்றுக் கொள்ளவே நபி (ஸல்) அவரை கைபரிலிருந்து திரும்பும் போது ஹிஜ்ரி 7-ல் மணமுடித்துக் கொண்டார்கள். (புகாரி-137) மதீனாவுக்குச் செல்லும் வழியில் கைபரிலிருந்து 12
மைல் தொலைவிலுள்ள ‘சத்துஸ் ஸஹ்பா’ எனுமிடத்தில் இவருடன் நபி (ஸல்) வாழ்க்கையைத் தொடங்கினார்கள்.
11) மைமூனா பின்தி ஹாரிஸ் (ரளி)
இவர் உம்முல் ஃபழ்ல் லுபாபா பின்த் ஹாரிஸின் சகோதரியாவார். நபி (ஸல்) உம்ரத்துல் கழாவை முடித்துத் திரும்பும் போது ஹிஜ்ரி 7,
துல்கஅதாவில் இவரை மணமுடித்தார்கள். மக்காவிலிருந்து 9 மைல் தொலைவிலுள்ள ‘சஃப்’ என்ற இடத்தில் இவருடன் நபி (ஸல்) இல்லற வாழ்வைத் தொடங்கினார்கள். ஹிஜ்ரி 61-ல் இதே சஃப் என்ற இடத்திலேயே இவர் மரணமடைந்தார் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார். மரணமடைந்த ஆண்டு சிலர் ஹிஜ்ரி 38 என்றும், சிலர் 63 என்றும் கூறுகிறார்கள்.
ஆக, மேற்கூறிய 11 பெண்களை நபி (ஸல்) மணமுடித்து வாழ்க்கை நடத்தினார்கள். இவர்களில் கதீஜா, ஜைனப் பின்த் குஜைமா (ரளி) ஆகிய இருவரும் நபி (ஸல்) வாழும்போதே மரணமானார்கள். மற்ற மனைவிமார்கள் அனைவரும் சில பல ஆண்டுகள் வாழ்ந்து மரணமானார்கள். இவர்களைத் தவிர, கிலாஃப் குடும்பத்தாரைச் சேர்ந்த ஒரு பெண்ணையும், கிந்தா குடும்பத்தைச் சேர்ந்த ஜுவைனிய்யா என்ற பெண்ணைiயும் நபி (ஸல்) மணமுடித்தார்கள். ஆனால், அவர்களுடன் வாழ்க்கை நடத்தவில்லை.
நபி (ஸல்)
அவர்களின் இரு அடிமை பெண்கள்
நபி (ஸல்) அவர்களுக்கு இரு அடிமைப் பெண்கள் இருந்தனர். ஒன்று: மன்னர் முகவ்கிஸ் வழங்கிய “மாரியத்துல் கிப்திய்யா,
‘என்ற அடிமைப்பெண்
மூலம் நபி (ஸல்) அவர்களுக்கு இப்ராஹீம் என்ற
ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இவர் ஒன்றரை வயதிலேயே (ஹிஜ்ரி 10,
ஷவ்வால் பிறை 28
அல்லது 29,
(கி.பி. 632
ஜனவரி 27ல்) வஃபாத்தாகிவிட்டார்.
இரண்டாவது அடிமை: ரைஹானா பின்த் ஜைது. இவர் பனூ நளீர் அல்லது பனூ குறைளா சமூகத்தைச் சேர்ந்தவர். பனூ குறைளாவுடன் போரில் கைது செய்யப்பட்ட இப்பெண்ணை நபி (ஸல்) தனது பங்கில் எடுத்துக் கொண்டார்கள். இவரை உரிமையிட்ட பிறகு நபி (ஸல்) மணமுடித்தார்கள், எனவே, இவர் நபி (ஸல்) அவர்களின் மனைவியாகி விடுகிறார் என்று வேறு சிலர் கூறுகின்றனர். அறிஞர் இப்னுல் கய்யூம்‘முந்திய கூற்றே ஏற்றமானது’ என்கின்றார். அபூ உபைதா (ரஹ்) என்ற அறிஞர் “மேலும் இரண்டு அடிமைப் பெண்கள் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தார்கள் ஒருவர் ஜமீலா, இவர் போர்க் கைதியாக கிடைத்தவர். மற்றொருவர் பெயர் தெரியவில்லை, அவரை ஜைனப் பின்த் ஜஹ்ஷ் நபியவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார்கள்” என்கின்றார். (நூற்கள்: ஜாதுல் மஆது , அர்ரஹீகுல் மக்தூம்)
அண்ணலார் (ஸல்) அவர்களின் குழந்தைகள்
ஜைனப் (ரளி) அவர்கள் அபுல் ஆஸுக்கு நிகாஹ்
செய்யப்பட்டார். ருகையா (ரளி) மற்றும் உம்மு குல்ஸும் (ரளி) ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக
ஹளரத் உஸ்மான் பின் அப்ஃபான் (ரளி) அவர்களுக்கு நிக்காஹ் செய்யப்பட்டார்கள். ஃபாத்திமா
(ரளி) அவர்கள் அலி பின் அபூதாலிப் (ரளி) அவர்களுக்கு ஹிஜ்ரி 2-ல் பத்ருப்போர் முடிந்து
துல்ஹஜ் மாதம் நிகாஹ் செய்யப்பட்டார்.
நபி (ஸல்) அவர்களுக்கு 40 வயதாக இருக்கும்போது
கடைசி மாகளாகிய ஃபாத்திமா (ரளி) மக்காவில் பிறந்தார்கள். நாயகம் (ஸல்) அவர்கள் வஃபாத்தாகி
6-வது மாதம் ஹிஜ்ரி 11,
ரமளான் மாதம் 3 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை
வஃபாத்தாகி ஜன்னதுல் பகீயில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.
இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
சூரத்துன் நஸ்ர் (இதா ஜாஅ நஸ்ருல்லாஹி) இறங்கியபோது,
நபி (ஸல்) அவர்கள் மகளார் ஃபாத்திமா (ரளி) அவர்களிடம் எனது ஆயுள்
முடியப்போகிறது என்றார்கள். ஃபாத்திமா (ரளி) அழுதார்கள். நபியவர்கள்,
(ஃபாத்திமாவே!) அழாதே! (நான் மரணித்தபிறகு) நமது குடும்பத்தில் என்னை
வந்து சந்திப்பவர்களின் நீயே முதலாவது ஆவாய் என்றார்கள். ஃபாத்திமா (ரளி) அவர்கள் சிரித்தார்கள்.
இதை நபியவர்கள் துணைவியர்களில் சிலர் கவனித்தனர். (ஒருசந்தர்பத்தில்) ஃபாத்திமாவே!
நாயகமவர்கள் (ஏதோ இரகசியமாக) உம்மிடம் சொன்னபோது,
முதலில் அழுதீர் பிறகு சிரித்தீர் என்ன விளக்கம்? என்று கேட்டனர்.
(அதுவா?) நபியவர்கள் தனது ஆயுள் முடியப்போகிறது என்று
என்னிடம் சொன்னபோது அழுதேன். அப்போது,
(ஃபாத்திமாவே!) அழாதே! (நான் மரணித்தபிறகு) நமது குடும்பத்தில் என்னை
வந்து சந்திப்பவர்களின் நீயே முதலாவது ஆவாய் என்றார்கள். சிரித்தேன் என்று விளக்கம்
கூறினார்கள். (தாரமீ-79)
எனவே,
அண்ணலார் (ஸல்) அவர்களின் குடும்பத்தை நன்கு அறிந்துகொண்டு அவர்கள்
வாழ்ந்த வாழ்க்கையைப்போல் நாமும் வாழ்ந்து இவ்விலகிலும் மறுஉலகிலும் வெற்றிபெற்றவர்களாக
ஆக வல்லோன் அல்லாஹ் நல்லருள் புறிவானாக! ஆமீன் யாரப்பல் ஆலமீன்!!
아무것발로의전쟁 시에에있는 사람은거같아 링크를위해선 한다고해서라도 링크
ReplyDelete