Friday, June 5, 2015

ஒடுக்கப்படும் முஸ்லிம்கள்


சத்தியத்தை இவ்வுலகத்தில் நிலைநிறுத்தவே எண்ணற்ற நபிமார்களை அல்லாஹ் அனுப்பிவைத்தான். நபித்துவம் எங்கே தோன்றியதோ அங்கே அதற்கான எதிர்ப்பும் முளைக்கிறது. நபி மூஸா அலை அவர்களுக்கு பிர்அவ்னை போல, நபி இப்ராஹீம் அலை அவர்களுக்கு நம்ரூதைபோல, நபி ஸல் அவர்களுக்கு அபூ ஜஹ்லை போல, அசத்தியவாதிகள் ஒவ்வொரு காலத்திலும் தோன்றினார்கள். இறுதியில் அவர்களும், அவர்களின் கொள்கைகளும் தோன்றிய இடத்திலேயே அடையாளம் தெறியாமல் புதைக்கப்பட்டுவிட்டது.


أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُمْ مَثَلُ الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ مَسَّتْهُمُ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا حَتَّى يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَى نَصْرُ اللَّهِ أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ. (القرآن 2: 124)
(நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு முன் சென்றவர்களுக்கு ஏற்பட்டது போன்ற (கஷ்டமான) நிலைமை உங்களுக்கு வராமலே நீங்கள் சுவர்க்கத்தில் நுழைந்து விடலாமென்று நினைத்துக் கொண்டீர்களோ? (உங்களைப் போல) நம்பிக்கை கொண்ட அவர்களையும் அவர்களுடைய தூதரையும், வாட்டும் வறுமையிலும், நோயிலும் பீடித்து (அவர்கள் வருந்தித் தங்களுடைய கஷ்டங்களை நீக்கி வைக்க) "அல்லாஹ்வுடைய உதவி எப்பொழுது (வரும்? எப்பொழுது வரும்?)" என்று கேட்டதற்கு "அல்லாஹ் வுடைய உதவி நிச்சயமாக (இதோ) சமீபத்திலிருக்கிறது" என்று (நாம் ஆறுதல்) கூறும் வரையில் அவர்கள் ஆட்டி வைக்கப்பட்டார்கள்.

துன்புறுத்துதல்:
நபி (ஸல்) அவர்களின் பகிரங்க அழைப்பைத் தொடர்ந்து பல மாதங்கள் எதிரிகள் மேற்கொண்ட தடுப்பு முயற்சிகள் அனைத்தும் தோல்வியைத் தழுவின. தாங்கள் கையாண்ட வழிமுறைகளால் எவ்வித பயனுமில்லை என்று அவர்களின் அறிவுக்கு மெதுவாக உரைத்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கையாக மாற்று வழியைக் கையாண்டனர். அதாவது, ஒவ்வொரு சமூகத்தலைவரும் எஜமானரும் தன்னுடைய ஆளுமையின் கீழுள்ளவர்கள், அடிமைகள்- இவர்களில் யாராவது இஸ்லாமைத் தழுவினால் அவர்களைத் துன்புறுத்த வேண்டும். அவர்களுக்கு இன்னல்கள் விளைவிக்க வேண்டும் என முடிவு செய்தனர்.

தலைவர்களுடன் அவர்களது எடுபிடிகளும் சேர்ந்துகொண்டு முஸ்லிம்களை வாட்டி வதைத்தனர். குறிப்பாக, சாதாரண எளிய முஸ்லிம்களுக்கு அவர்கள் தந்த நோவினைகளைக் கேட்கும்போதே உள்ளம் கசிந்துருகும். அவற்றை சொல்லி மாளாது.

செல்வமும் செல்வாக்குமுள்ள ஒருவர் இஸ்லாமைத் தழுவினால் அவரிடம் அபூஜஹ்ல் நேரே சென்று உன் செல்வத்தையும் செல்வாக்கையும் ஒன்றுமில்லாமலாக்கி விடுவேன்என்று மிரட்டுவான். அவர் கொஞ்சம் பலமில்லாதவராக இருந்தால் அடித்துத் துன்புறுத்துவான். (இப்னு ஹிஷாம்)

உஸ்மான் (ரழி) அவர்களது தந்தையின் சகோதரர் அப்பாவி முஸ்லிம்களை பேரீத்தங்கீற்றுப் பாயில் சுருட்டி வைத்து அதற்குக் கீழே புகை மூட்டி மூச்சு திணறடிப்பர். (ரஹ்மத்துல்லில் ஆலமீன்)

தனது மகன் முஸ்லிமாகி விட்டதை அறிந்த முஸ்அப் இப்னு உமைர் (ரழி) அவர்களின் தாயார் அவருக்கு உணவு, தண்ணீர் கொடுக்காமல் வீட்டிலிருந்து விரட்டிவிட்டார். மிக ஆடம்பரமாக வாழ்ந்து வந்த அவர் பெரும் துன்பத்தை அனுபவித்தார். பசி, பட்டினி என்ற வறண்ட வாழ்க்கையினால் அவர்களது மேனியின் தோல் சுருங்க ஆரம்பித்தது. (அஸதுல் காபா)

ஸுஹைப் இப்னு ஸினான் (ரழி) நினைவிழக்கும் வரை கடுமையாக தாக்கப்படுவார். (அஸதுல் காபா)

பிலால் (ரழி) அவர்கள் உமய்யா இப்னு கலஃபுடைய அடிமையாக இருந்தார்கள். உமையா அவர்களது கழுத்தில் கயிற்றைக் கட்டி சிறுவர்களிடம் கொடுப்பான். சிறுவர்கள் அவரை மக்காவின் கரடு முரடான மலைப் பாதைகளில் இழுத்துச் செல்வார்கள். கயிற்றின் அடையாளம் அவர்களது கழுத்தில் பதிந்துவிடும். அவர்கள் அஹத்! அஹத்!“” என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். சில வேளைகளில் உமையா பிலாலை மிக இறுக்கமாகக் கட்டி தடியால் கடுமையாகத் தாக்குவான். பிறகு சூரிய வெப்பத்திலும் போடுவான். உணவளிக்காமல் பசியால் துடிக்க வைப்பான். சுட்டெரிக்கும் சூரிய வெப்பத்தில் பாலைவன மணலில் கிடத்தி அவர்களது நெஞ்சின்மீது பாறாங்கல்லைத் தூக்கி வைப்பான். அப்போது பிலாலை நோக்கி, “அல்லாஹ்வின் மீதாணையாக! நீ சாக வேண்டும். அல்லது முஹம்மதின் மார்க்கத்தை நிராகரித்து லாத், உஜ்ஜாவை வணங்க வேண்டும். அதுவரை நீ இப்படியேதான் இருப்பாய். உன்னை விடவே மாட்டேன்என்பான். அதற்கு பிலால் (ரழி) அஹத்! அஹத்! என்று சொல்லிக் கொண்டே, “இந்த அஹத்என்ற வார்த்தையைவிட உனக்கு ஆவேசத்தை உண்டு பண்ணும் வேறொரு வார்த்தை எனக்குத் தெரிந்தால் நான் அதையே கூறுவேன்என்பார்கள்.

ஒரு நாள் பிலால் (ரழி) சித்திரவதைக்குள்ளாகி இருக்கும்போது அவர்களைக் கடந்து சென்ற அபூபக்ர் (ரழி) அவர்கள் ஒரு ஹபஷி அடிமையை கிரயமாகக் கொடுத்து பிலால் (ரழி) அவர்களை வாங்கி உரிமை விட்டார்கள். சிலர் ஐந்து அல்லது ஏழு ஊகியா வெள்ளிக்குப் பகரமாக வாங்கி உரிமை விட்டார்கள்என்று கூறுகின்றனர். (இப்னு ஹிஷாம்)

அம்மார் இப்னு யாஸிர் (ரழி), அவர்களது தகப்பனார் யாஸிர், தாயார் ஸுமய்யா ஆகிய மூவரும் மக்ஜூம் கிளையைச் சேர்ந்த அபூ ஹுதைஃபா இப்னு முகீரா என்பவனின் அடிமைகளாக இருந்தார்கள். மூவரும் இஸ்லாமைத் தழுவினர். இம்மூவரையும் அபூஜஹ்ல் தலைமையில் ஒரு கூட்டம் அப்தஹ்என்ற இடத்துக்கு அழைத்துச் சென்று மதிய வேளையில் சுடு மணலில் கிடத்தி கடுமையாக சித்திரவதை செய்தனர். இதனைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் யாஸின் குடும்பத்தாரே! பொறுமையை மேற்கொள்ளுங்கள். உங்களுக்கு சொர்க்கம் வாக்களிக்கப்பட்டுள்ளதுஎன ஆறுதல் கூறினார்கள். நிராகரிப்பவர்களின் வேதனையாலேயே யாஸிர் (ரழி) இறந்துவிட்டார்கள். வயது முதிர்ந்து இயலாதவராக இருந்த அம்மான் தாயாரான சுமைய்யா பின்த் கய்யாத் (ரழி) அவர்களை அபூ ஜஹ்ல் அவர்களது பெண்ணுறுப்பில் ஈட்டியால் குத்திக் கொலை செய்தான். இவரே இஸ்லாமிற்காக உயிர் நீத்த முதல் பெண்மணியாவார்.

அவர்களது மகனாரான அம்மாரை பாலைவனச் சுடுமணலில் கிடத்தி நெஞ்சின் மீது பாறாங்கல்லை வைத்தும், நினைவிழக்கும் வரை தண்ணீல் மூழ்கடித்தும் சித்திரவதை செய்தனர். முஹம்மதை திட்ட வேண்டும் அல்லது லாத், உஜ்ஜாவைப் புகழ வேண்டும். அப்போதுதான் உன்னை இத்தண்டனையிலிருந்து விடுவிப்போம்என்றும் கூறினர். வேதனை தாளாத அம்மார் (ரழி) அவர்கள் நிராகரிப்பவர்களின் கட்டளைக்கு இணங்கிவிட்டார். அதற்குப் பின் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அழுது மன்னிப்புக் கோரினார். அப்போது அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கியருளினான். (இப்னு ஹிஷாம்)

(
ஆகவே,) எவரேனும் நம்பிக்கை கொண்டதன் பின்னர், அல்லாஹ்வை (நிராகரித்தால் அவனைப் பற்றிக் கவனிக்கப்படும்.) அவனுடைய உள்ளம் நம்பிக்கையை கொண்டு முற்றிலும் திருப்தியடைந்தே இருக்க, எவனுடைய நிர்ப்பந்தத்தின் மீதும் அவன் (இவ்வாறு) நிராகரித்தால் (அவன்மீது யாதொரு குற்றமுமில்லை.) எனினும், அவனுடைய உள்ளத்தில் நிராகரிப்பே நிறைந்திருந்(து இவ்வாறு செய்)தால் அவன் மீது அல்லாஹ்வுடைய கோபம்தான் ஏற்படும். அவனுக்கு கடுமையான வேதனையுமுண்டு. (அல்குர்ஆன் 16:106)

அஃப்லஹ் அபூ ஃபுகைஹா (ரழி) அவர்கள் அப்து தார் கிளையைச் சார்ந்த ஒருவருடைய அடிமையாக இருந்தார். இவரது இரு கால்களையும் சங்கிலியால் பிணைத்து, ஆடைகளைக் கழற்றிவிட்டு சுடுமணலில் குப்புறக் கிடத்தி அசையாமலிருக்க பெரும் பாறையை முதுகின் மீது வைத்து, சுய நினைவை இழக்கும்வரை அவரை அதே நிலையில் விட்டுவிடுவார்கள். இவ்வாறான கொடுமைகள் தொடர்ந்தன. ஒருமுறை அவரது கால்களைக் கயிற்றால் பிணைத்துச் சுடுமணலில் கிடத்தி கழுத்தை நெறித்தார்கள். அவர் சுயநினைவை இழந்தவுடன் இறந்துவிட்டாரென எண்ணி விட்டுவிட்டார்கள். அப்போது அவ்வழியாக வந்த அபூபக்ர் (ரழி) அஃப்லஹை விலைக்கு வாங்கி உரிமையிட்டார்கள். (அஸதுல் காபா)

கப்பாப் இப்னு அரத் (ரழி) அவர்கள் உம்மு அன்மார் என்ற பெண்ணின் அடிமையாகவும், கொல்லர் பணி செய்பவராகவும் இருந்தார்கள். அவர் இஸ்லாமைத் தழுவியதை அறிந்த எஜமானி பழுக்கக் காய்ச்சப்பட்ட இரும்பால் அவர்களது தலையிலும் முதுகிலும் சூடிட்டு முஹம்மதின் மார்க்கத்தை விட்டுவிடுஎன்று கூறுவாள். ஆனால் இவ்வாறான வேதனைகளால் அவர்களது ஈமானும்மன உறுதியுமே அதிகரித்தது. உம்மு அன்மார் மட்டுமின்றி ஏனைய நிராகரிப்பவர்களும் அவரது முடியைப் பிடித்திழுப்பார்கள்; கழுத்தை நெறிப்பார்கள். நெருப்புக் கங்குகளின் மீது அவரைப் படுக்க வைப்பார்கள். அந்த நெருப்பு அவரது உடலைப் பொசுக்க, அப்போது இடுப்பிலிருந்து கொழுப்பு உருகி ஓடி, நெருப்பை அணைத்துவிடும். (அஸதுல் காபா)

ரோம் நாட்டைச் சேர்ந்த அடிமையான ஜின்னீரா (ரழி) என்ற பெண்மணி இஸ்லாமை ஏற்றதற்காக பலவிதமான கொடுமைக்கு ஆளானார். அப்போது கண்ணில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக பார்வையை இழந்தார். இவரது கண்ணை லாத், உஜ்ஜா பறித்துவிட்டனஎன்று நிராகரிப்பவர்கள் கூறினர். அதற்கு ஜின்னீரா, “நிச்சயமாக இல்லை! அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஏற்பட்டது. அவன் நாடினால் எனக்கு நிவாரணமளிப்பான்என்று கூறினார். மறுநாள் அவர்களது பார்வையை அல்லாஹ் சசெய்தான். அதைக் கண்ட குறைஷியர்கள் இது முஹம்மதின் சூனியத்தில் ஒன்றுஎனக் கூறினர். (இப்னு ஹிஷாம்)

உம்மு உபைஸ் (ரழி) என்ற பெண்மணி அஸ்வத் இப்னு அப்து யகூஸ் என்பவனின் அடிமையாக இருந்தார். இவன் நபி (ஸல்) அவர்களின் கொடும் விரோதியாகவும் நபியவர்களை பரிகசிப்பவனாகவும் இருந்தான். அவன் உம்மு உபைஸை கொடூரமாக வேதனை செய்தான். (இஸாபா)

அம்ர் இப்னு அதீ என்பவனின் அடிமைப் பெண்ணும் இஸ்லாமை ஏற்றார். அவரை (அப்போது இஸ்லாமை ஏற்காதிருந்த) உமர் (ரழி), தான் களைப்படையும் வரை சாட்டையால் அடித்துவிட்டு நீ மரணிக்கும்வரை உன்னை நான் விடமாட்டேன்என்று கூறுவார். அதற்கு அப்பெண்மணி அப்படியே உமது இறைவனும் உம்மைத் தண்டிப்பான்என்று கூறுவார். (இப்னு ஹிஷாம்)

இஸ்லாமை ஏற்றதற்காக கொடுமை செய்யப்பட்ட அடிமைப்பெண்களில் நஹ்திய்யா (ரழி) என்பவரும் அவரது மகளும் அடங்குவர். இவ்விருவரும் அப்துத்தான் கிளையைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் அடிமையாக இருந்தனர். (இப்னு ஹிஷாம்)

இஸ்லாமை ஏற்றதற்காகக் கொடுமை செய்யப்பட்ட ஆண் அடிமைகளில் ஆமிர் இப்னு புஹைரா (ரழி) என்பவரும் ஒருவர். நினைவிழந்து சித்தப் பிரமை பிடிக்குமளவு அவரை கொடுமைப்படுத்தினார்கள். (இப்னு ஹிஷாம்)

இம்மூவரையும் அபூபக்ர் (ரழி) விலைக்கு வாங்கி உரிமையிட்டார்கள். இதைக் கண்ட அவர்களது தந்தையான அபூ குஹாஃபா நீ பலவீனமான அடிமைகளை விலைக்கு வாங்கி உரிமை விடுகிறாய். திடகாத்திரமான ஆண் அடிமைகளை வாங்கி உரிமையளித்தால் அவர்கள் உனக்கு பக்கபலமாக இருப்பார்களே!என்றார்.

அதைக் கேட்ட அபூபக்ர் (ரழி) அவர்கள் நான் அல்லாஹ்வின் திருப்தியை நாடியே செய்கிறேன்என்றார்கள். அல்லாஹ் அவர்களைப் புகழ்ந்தும் இஸ்லாமின் எதிரிகளை இகழ்ந்தும் அடுத்துள்ள வசனங்களை இறக்கினான்.

(
மக்காவாசிகளே!) கொழுந்து விட்டெயும் நெருப்பைப் பற்றி நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றேன். மிக்க துர்பாக்கியம் உடையவனைத் தவிர, (மற்றெவனும்) அதற்குள் செல்ல மாட்டான். அவன் (நம்முடைய வசனங்களைப்) பொய்யாக்கிப் புறக்கணித்துவிடுவான். (அல்குர்ஆன் 92:14-16)

இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள துர்பாக்கியமுடையவன் உமைய்யாவும் அவனுடைய வழியில் முஸ்லிம்களை கொடுமைப்படுத்தியவர்களுமாவர்.

இறையச்சமுள்ளவர்தான் அதிலிருந்து தப்பித்துக் கொள்வார். (அவர் பாவத்திலிருந்து தன்னைப்) பரிசுத்தமாக்கிக் கொள்ளும் பொருட்டுத் தன்னுடைய பொருளை(த் தானமாக)க் கொடுப்பார். அவர் பதில் செய்யக்கூடியவாறு எவருடைய நன்றியும் அவர் மீது இல்லாதிருந்தும், மிக்க மேலான தன் இறைவனின் முகத்தை விரும்பியே தானம் கொடுப்பார். (இறைவன் அவருக்கு அளிக்கும் கொடையைப் பற்றிப்) பின்னர் அவரும் திருப்தியடைவார். (அல்குர்ஆன் 92:17-21)

இவ்வசனத்தில் இறையச்சமுள்ளவர் என குறிப்பிடப்படுபவர் அபூபக்ர் (ரழி) அவர்களாவார். (இப்னு ஹிஷாம்)

அபூபக்ர் (ரழி) அவர்களும் துன்புறுத்தப்பட்டார்கள். நவ்ஃபல் இப்னு குவைலித் என்பவன் அபூபக்ர் (ரழி), தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழி) இருவரையும் தொழக்கூடாது என்பதற்காக ஒரே கயிற்றில் இருவரையும் பிணைத்துவிட்டான். ஆனால், கட்டவிழ்ந்து அவ்விருவரும் தொழுவதைக் கண்ட நவ்ஃபல் அஞ்சி நடுங்கினான். இருவரும் ஒரே கயிற்றில் பிணைக்கப் பட்டதால் அவர்களை கரீனைன் - இணைந்த இருவர்என்று கூறப்படுகிறது. சிலர் இருவரையும் கட்டியது நவ்ஃபல் அல்ல, தல்ஹாவின் சகோதரன் உஸ்மான் இப்னு உபைதுல்லாஹ்தான் என்று கூறுகின்றனர்.

(
மேற்கூறிய சம்பவங்கள் மக்கா முஸ்லிம்கள் பட்ட இன்னல்களுக்கு எடுத்துக் காட்டாகும்.) இஸ்லாமைத் தழுவிய எவரையும் அவர்கள் துன்புறுத்தாமல் விட்டதில்லை. எளிய முஸ்லிம்களைப் பாதுகாக்கவும் அவர்களுக்காகப் பழிவாங்கவும் எவருமில்லை என்பதால் அவர்களைக் கடுமையாகத் தண்டிப்பது நிராகரிப்பவர்களுக்கு மிக எளிதாக இருந்தது. அடிமைகளாக இருந்தவர்களை அவர்களது எஜமானர்களும் அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் கொடுமைப் படுத்தினர். இஸ்லாமைத் தழுவியவர் செல்வமும் செல்வாக்கும் உடையவராக இருந்தால், அவர்களுக்கு அவர்களது கூட்டத்தார் பாதுகாவலாக இருந்தனர். சில வேளைகளில் குரோதத்தின் காரணமாக அவர்களது கூட்டத்தினரே அவர்களை கொடுமை செய்தனர். 

நபியவர்கள் மீது அத்துமீறல்:
நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் அருளப்பட்டு அழைப்புப் பணியைத் தொடங்கும் வரை குறைஷியர்கள் அவர்களை தங்களில் மதிக்கத்தக்க நபராகவே கருதி வந்தனர். அழைப்புப் பணியைத் தொடங்கியதும் அவர்கள் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு நபி (ஸல்) அவர்கள் மீது அத்துமீறாதிருந்தனர். தற்பெருமையும் ஆணவமும் கொண்டிருந்த அவர்களால் நபி (ஸல்) அவர்களின் செயல்பாடுகளை நீண்ட நாள் சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை. குறைஷித் தலைவர்களில் ஒருவனான அபூ லஹப் அழைப்புப் பணியின் முதல் நாளிலிருந்தே நபி (ஸல்) அவர்களிடம் கடும் பகைமையைக் காட்டி வந்தான் என்பதை ஹாஷிம் கிளையாரின் சபையிலும் ஸஃபா மலை நிகழ்ச்சியிலும் நாம் அறிந்திருக்கிறோம்.

நபித்துவத்துக்கு முன் நபி (ஸல்) அவர்கள் தங்களின் மகள்கள் ருகையா, உம்மு குல்ஸும் (ரழி) அவர்களை அபூலஹபின் மகன்களான உத்பா, உதைபாவுக்கு மணமுடித்துக் கொடுத்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரத்தைத் தொடங்கியதும் அபூ லஹப் தனது மகன்களை நிர்ப்பந்தித்து விவாகரத்துச் செய்ய வைத்துவிட்டான். (இப்னு ஹிஷாம்)

நபி (ஸல்) அவர்களின் இரண்டாவது மகனாரான அப்துல்லாஹ் சிறு வயதில் மரணமடைந்த போது அபூலஹப் மட்டில்லா மகிழ்ச்சியுடன் தனது தோழர்களிடம் முஹம்மது சந்ததியற்றவராகி விட்டார்என்ற சுபச் செய்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள் எனக் கூறினான். (தஃப்ஸீர் இப்னு கஸீர்)

ஹஜ்ஜுடைய காலங்களிலும் கடைத்தெருக்களிலும் அபூலஹப் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் சுற்றி வந்து அவர்களைப் பொய்யர்என்று கூறுவான். அது மட்டுமல்லாமல் ரத்தம் கொட்டும்வரை அவர்களது பிடரியில் பொடிக்கற்களால் அடித்துக்கொண்டே இருப்பான். (கன்ஜுல் உம்மால்)

அபூ லஹபின் மனைவியும் அபூ ஸுஃப்யானின் சகோதரியுமான உம்மு ஜமீல் நபி (ஸல்) அவர்களுக்கு நோவினை கொடுப்பதில் தனது கணவனைவிட குறைந்தவளும் அல்ல! சளைத்தவளும் அல்ல! முட்களை நபி (ஸல்) செல்லும் பாதையிலும் அவர்களது வீட்டின் வாசலிலும் வைத்து விடுவாள். மிகக் கெட்டவளான இவள் எந்நேரமும் நபி (ஸல்) அவர்களை ஏசிப் பேசிக்கொண்டிருந்தாள். பல பொய்களைப் பரப்பிக் கொண்டே இருப்பாள். நபி (ஸல்) அவர்களுக்கு எதிராகக் குழப்பம் விளைவித்துக் கொண்டும், பிரச்சினையின் நெருப்பை மூட்டிவிட்டுக் கொண்டும் இருப்பாள். இதனால்தான் அல்குர்ஆன் அவளை ஹம்மாலதல் ஹத்தப்விறகை சுமப்பவள் என்று வர்ணிக்கிறது.

தன்னைப் பற்றியும் தனது கணவனைப் பற்றியும் குர்ஆனின் வசனம் இறங்கியதை அறிந்து அவள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தாள். அப்போது நபி (ஸல்) அவர்களும் அபூபக்ரும் (ரழி) கஅபத்துல்லாஹ்விற்கு அருகில் உட்கார்ந்திருந்தார்கள். அவளது கையில் குழவிக் கல் இருந்தது. இருவருக்கும் அருகில் அவள் வந்தவுடன் அவளது பார்வையை நபி (ஸல்) அவர்களைப் பார்க்க முடியாமல் அல்லாஹ் பறித்து விட்டான்.

அபூபக்ரைப் பார்க்க முடிந்த அவளால் நபி (ஸல்) அவர்களைப் பார்க்க முடியவில்லை. அபூபக்ரே உமது தோழர் எங்கே? அவர் என்னை கவிதைகளில் ஏசுகிறார் என்று எனக்கு தெரிய வந்துள்ளது. அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவரை நான் பார்த்தால் இக்குழவிக் கல்லால் அவரது வாயிலேயே அடிப்பேன். அறிந்து கொள்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! எனக்கும் நன்றாகக் கவி பாடத்தெரியும்என்று கூறிய பின் அடுத்து வரும் கவிதையைப் படித்தாள்.

இழிவுக்குரியவரைத்தான் நாங்கள் ஏற்க மறுத்தோம்; அவரது கட்டளையை புறக்கணித்தோம்; அவருடைய மார்க்கத்தையும் வெறுத்தோம்.

பிறகு அவள் திரும்பிச் சென்றுவிட்டாள். அப்போது அபூபக்ர் (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! அவள் உங்களைப் பார்த்ததை நீங்கள் பார்க்கவில்லையா?” என வினவ அவள் என்னைப் பார்க்கவில்லை. அல்லாஹ் என்னை பார்க்க முடியாமல் அவளது பார்வையை மறைத்து விட்டான்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு ஹிஷாம்)

இச்சம்பவம் பற்றி முஸ்னத் பஜ்ஜார்எனும் நூலின் அறிவிப்பில் வருவதாவது: அவள் அபூபக்ரிடம் வந்து அபூபக்ரே! உங்கள் தோழர் என்னை கவிதையில் திட்டுகிறார்என்றாள். அதற்கு அபூபக்ர் (ரழி) இந்த வீட்டின் இறைவனின் மீது சத்தியமாக! அவருக்கு கவிதை பாடத் தெரியாதுஎன்று கூறினார்கள். ஆம்! நீங்கள் சரியாகத்தான் கூறினீர்கள்என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.

நபி (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரனாகவும் நபி (ஸல்) அவர்களின் அண்டை வீட்டுக்காரனாகவும் இருந்த அபூலஹபும் இவ்வாறே செய்து கொண்டிருந்தான். அவனது வீடு நபி (ஸல்) அவர்களின் வீட்டுடன் இணைந்திருந்தது. அவனும் அவனைப் போன்ற நபி (ஸல்) அவர்களின் மற்ற அண்டை வீட்டார்களும் நபி (ஸல்) அவர்கள் வீட்டினுள் இருக்கும்போது நோவினை அளித்துக் கொண்டே இருப்பார்கள்.

இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார்: நபி (ஸல்) வீட்டினுள் இருக்கும்போது நபி (ஸல்) அவர்களின் அண்டை வீட்டார்களான அபூலஹப், ஹகம் இப்னு அபுல்ஆஸ் இப்னு உமைய்யா, உக்பா இப்னு அபீமுயீத், அதீ இப்னு ஹம்ராஃ ஸகஃபீ, இப்னுல் அஸ்தா ஆகியோர் எப்போதும் நபி (ஸல்) அவர்களுக்கு மிகுந்த நோவினை அளித்து வந்தனர். இவர்களில் ஹகம் இப்னு அபுல் ஆஸைத் தவிர வேறு யாரும் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவில்லை. தொழுது கொண்டிருக்கும் போது ஆட்டின் குடலை நபி (ஸல்) அவர்களை நோக்கி வீசுவார்கள். நபி (ஸல்) அவர்கள் வீட்டில் சமைப்பதற்காக சட்டியை வைக்கும்போது அதில் ஆட்டுக்குடலை போடுவார்கள். இதற்காகவே இவர்களிலிருந்து தன்னை மறைத்துக் கொள்வதற்காக ஒரு சுவரை ஏற்படுத்திக் கொண்டார்கள். இவர்கள் அசுத்தங்களை தூக்கி எறியும்போது அதைக் குச்சியில் வெளியே எடுத்து வந்து தனது வீட்டு வாசலில் நின்றவண்ணம் அப்து மனாஃபின் குடும்பத்தினரே! இதுதான் அண்டை வீட்டாருடன் மேற்கொள்ளும் ஒழுக்கமா?” என்று கேட்டு, அதை ஓர் ஓரத்தில் தூக்கி வீசுவார்கள். (இப்னு ஹிஷாம்)

உக்பா இப்னு அபூமுயீத் விஷமத்தனத்தில் எல்லை மீறி நடந்து கொண்டான். இதைப் பற்றி ஒரு சம்பவத்தை இப்னு மஸ்ஊது (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கஅபாவுக்கு அருகில் தொழுது கொண்டிருந்தார்கள். அபூஜஹ்லும் அவனது கூட்டாளிகளும் அங்கு குழுமியிருந்தனர். அவர்கள் தங்களுக்குள் நம்மில் ஒருவர் இன்ன குடும்பத்தாரின் ஒட்டகங்கள் அறுக்குமிடத்திற்குச் சென்று அங்குள்ள குடலை எடுத்து வந்து முஹம்மது சுஜூதிற்குசென்ற பின் அவரது முதுகில் வைக்கவேண்டும். யார் அதனை செய்வது?” என்று கேட்டனர். அக்கூட்டத்திலே மிகவும் திமிர் கொண்டவனான உக்பா எழுந்து சென்று குடலை எடுத்து வந்து நபி (ஸல்) அவர்கள் சுஜூதிற்குச் சென்றவுடன் அவர்களது இரு புஜங்களுக்கு இடையில் முதுகின் மீது வைத்து விட்டான். இதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. எனக்கு தடுக்கும் சக்தி இருந்திருக்க வேண்டுமே! அவர்கள் தங்களுக்குள் மமதையாகவும், ஏளனமாகவும் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து விழுந்து விழுந்து சிரித்தனர். நபி (ஸல்) அவர்கள் தலையை உயர்த்த முடியாமல் சுஜூதிலேயே இருந்தார்கள். அங்கு வந்த ஃபாத்திமா (ரழி) அதை அகற்றியபோதுதான் நபி (ஸல்) அவர்கள் தலையைத் தூக்கினார்கள்.

பிறகு, “அல்லாஹ்வே! நீ குறைஷிகளைத் தண்டிப்பாயாக!என்று மூன்று முறை கூறினார்கள். இது குறைஷிகளுக்கு மிகவும் பாரமாகத் தெரிந்தது. மக்காவில் செய்யப்படும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படும் என்று அவர்கள் நம்பியிருந்தார்கள். பிறகு, பெயர் கூறி குறிப்பிட்டு அல்லாஹ்வே! அபூ ஜஹ்லை தண்டிப்பாயாக! உக்பா இப்னு ரபீஆவையும், ஷைபா இப்னு ரபீஆவையும், வலீத் இப்னு உக்பாவையும், உமைய்யா இப்னு கலஃபையும், உக்பா இப்னு அபூ முயீதையும் நீ தண்டிப்பாயாக!ஏழாவது ஒருவன் பெயரையும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால் எனக்கு அது நினைவில் இல்லை. என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் பெயர் குறிப்பிட்ட நபர்கள் அனைவரும் கொல்லப்பட்டு பத்ரு கிணற்றில் தூக்கி எறியப்பட்டதை நான் பார்த்தேன். (ஸஹீஹுல் புகாரி)

உமையா இப்னு கலஃப் ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களை பார்க்கும்போதெல்லாம் பகிரங்கமாக ஏசிக்கொண்டும், மக்களிடம் அவர்களைப்பற்றி இரகசியமாகக் குறை பேசிக்கொண்டும் இருப்பான். இவன் விஷயமாக சூரத்துல் ஹுமஜாவின் முதல் வசனம் இறங்கியது.

குறை கூறிப் புறம் பேசித் திரிபவர்களுக்கெல்லாம் கேடுதான். (அல்குர்ஆன் 104:1)

இப்னு ஹிஷாம் (ரஹ்) கூறுகிறார்: ஹுமஜாஎன்றால் பகிரங்கமாக ஒருவரை ஏசுபவன். கண் சாடையில் குத்தலாக பேசுபவன். யிலுமஜாஎன்றால் மக்களைப்பற்றி இரகசியமாக குறைகளை பேசுபவன். (இப்னு ஹிஷாம்)

உமையாவின் சகோதரன் உபை இப்னு கலஃபும் உக்பாவும் நபி (ஸல்) அவர்களுக்கு நோவினையளிப்பதில் ஒரே அணியில் இருந்தனர். ஒருமுறை உக்பா நபி (ஸல்) அவர்களுக்கருகில் அமர்ந்து அவர்கள் ஓதும் சிலவற்றைச் செவிமடுத்தான். இது உபைம்க்குத் தெரிய வந்தபோது உக்பாவைக் கடுமையாகக் கண்டித்தான். மேலும், நபி (ஸல்) அவர்களிடம் சென்று அவர்களது முகத்தில் எச்சிலைத் துப்பி வருமாறு அனுப்ப அவனும் சென்று துப்பி வந்தான். உபை இப்னு கலஃப் ஒருமுறை மக்கிப்போன எலும்புகளை நொறுக்கி, பொடியாக்கி நபி (ஸல்) அவர்களை நோக்கி காற்றில் ஊதிவிட்டான்.(இப்னு ஹிஷாம்)

அக்னஸ் இப்னு ஷரீக் என்பவனும் நபி (ஸல்) அவர்களை நோவினை செய்தவர்களில் ஒருவனாவான். இவனைப் பற்றி குர்ஆனில் இவனிடமிருந்த ஒன்பது குணங்களுடன் கூறப்பட்டுள்ளது.

(
நபியே! எடுத்ததற்கெல்லாம்) சத்தியம் செய்யும் அந்த அர்ப்பமானவனுக்கு நீங்கள் வழிப்படாதீர்கள். (அவன்) எப்பொழுதும் (புறம்பேசிக்) குற்றம் கூறி, கோள் சொல்வதையே தொழிலாகக் கொண்டுத் திரிபவன். (அவன்) எப்போதுமே நன்மையான காரியங்களைத் தடை செய்யும் வரம்பு மீறிய பெரும்பாவி. கடின சுபாவமுள்ளவன். இதற்கு மேலாக அவன் மக்களிலும் ஈனன். (அல்குர்ஆன் 68:10-13)

அபூஜஹ்ல் சில சமயம் நபி (ஸல்) அவர்களிடம் வந்து திருமறையின் வசனங்களை செவிமடுத்துச் செல்வான். ஆனால், நம்பிக்கை கொள்ளவோ, அடிபணியவோ மாட்டான். ஒழுக்கத்துடனோ, அச்சத்துடனோ நடந்து கொள்ளவும் மாட்டான். தனது சொல்லால் நபி (ஸல்) அவர்களுக்கு நோவினை அளிப்பதுடன் அல்லாஹ்வின் வழியிலிருந்து பிறரைத் தடுத்தும் வந்தான். தனது இச்செயலை புகழ்ந்து பேசுவதற்குரிய நற்காரியம் என்றெண்ணி அகந்தையுடனும் மமதையுடனும் நடந்து செல்வான். இவனைப் பற்றியே பின்வரும் திருமறை வசனங்கள் இறங்கின.

(
அவனோ அல்லாஹ்வுடைய வசனங்களை) உண்மையாக்கவுமில்லை தொழவுமில்லை. ஆயினும் (அவன் அவற்றைப்) பொய்யாக்கி வைத்து(த் தொழாதும்) விலகிக்கொண்டான். பின்னர், கர்வம்கொண்டு தன் குடும்பத்துடன் (தன் வீட்டிற்குச்) சென்றுவிட்டான். (அல்குர்ஆன் 75:31-33)

நபி (ஸல்) அவர்களை கண்ணியமிகு பள்ளியில் தொழுதவர்களாகப் பார்த்த தினத்திலிருந்தே அங்கு தொழுவதிலிருந்து நபி (ஸல்) அவர்களைத் தடுத்து வந்தான். ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் மகாம் இப்றாஹீமிற்குஅருகில் தொழுததைப் பார்த்த அவன் முஹம்மதே! நான் உன்னை இதிலிருந்து தடுத்திருக்க வில்லையா?” என்று கூறிக் கடுமையாக எச்சரித்தான். அதற்கு நபி (ஸல்) அவர்களும் தக்க பதில் கூறி அவனை அதட்டினார்கள். அதற்கு அவன் முஹம்மதே! எந்த தைரியத்தில் நீ என்னை மிரட்டுகிறாய்? அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவ்வோடையில் வசிப்போரில் நானே பெரியசபையுடையவன் (ஆதரவாளர்களைக் கொண்டவன்) என்பது உனக்குத் தெரியாதா?” என்றான். அப்போது,

ஆகவே, அவன் (தன் உதவிக்காகத்) தன் சபையோரை அழைக்கட்டும். நாமும் (அவனை நரகத்திற்கு அனுப்ப, நரகத்தின்) காவலாளிகளை அழைப்போம்.. (அல்குர்ஆன் 96:17, 18) ஆகிய வசனங்களை அல்லாஹ் இறக்கினான்.

மற்றுமொரு அறிவிப்பில் வந்திருப்பதாவது: நபி (ஸல்) அவர்கள் அவனது கழுத்தைப் பிடித்து உலுக்கி, உனக்குக் கேடுதான்; கேடுதான்! உனக்குக் கேட்டிற்கு மேல் கேடுதான்!! (அல்குர்ஆன் 75:34, 35) என்ற வசனத்தை கூறினார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் விரோதியாகிய அவன் முஹம்மதே! என்னையா நீ எச்சரிக்கிறாய்? நீயும் உனது இறைவனும் என்னை ஒன்றும் செய்துவிட முடியாது. மக்காவில் இரு மலைகளுக்குமிடையில் நடந்து செல்பவர்களில் நானே மிகப்பெரும் பலசாலிஎன்று கூறினான். (தஃப்ஸீர் இப்னு கஸீர்)

இவ்வாறு கண்டித்ததற்குப் பிறகும் கூட அபூஜஹ்ல் தனது மடமையிலிருந்து சுதாரித்துக் கொள்ளாமல் தனது கெட்ட செயலை தீவிரமாக்கிக் கொண்டேயிருந்தான். இதைப் பற்றி ஒரு சம்பவத்தை அபூ ஹுரைரா (ரழி) அவர்களின் வாயிலாக இமாம் முஸ்லிம் (ரஹ்) அறிவிக்கிறார்கள்:

முஹம்மது உங்களுக்கு முன்னிலையில் தனது முகத்தை மண்ணில் வைத்து தேய்க்கிறாராமேஎன்று அபூஜஹ்ல் கேட்டான். குழுமியிருந்தவர்கள் ஆம்!என்றனர். அதற்கவன் லாத், உஜ்ஜாவின் மீது சத்தியமாக! நான் அவரைப் பார்த்தால் அவரது பிடரியின் மீது கால் வைத்து அழுத்தி அவரது முகத்தை மண்ணோடு மண்ணாக ஆக்கி விடுவேன்என்று கூறினான். சிறிது நேரத்திற்குப் பிறகு நபி (ஸல்) அவர்களிடம் வந்தான். நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருந்தார்கள். அவன் நபி (ஸல்) அவர்களின் பிடரியை மிதிக்க முயன்றபோதெல்லாம் பின்னோக்கி விழுந்து தன் கைகளால் சமாளித்துத் தன்னைக் காப்பாற்றிக் கொண்டான். மக்கள் அபூ ஜஹ்லே! என்ன நேர்ந்தது?” என்று கேட்டனர். அதற்கு அவன் எனக்கும் அவருக்குமிடையில் நெருப்பாலான அகழியையும், மிகப்பெரியபயங்கரத்தையும், பல இறக்கைகளையும் பார்த்தேன்என்று கூறினான். பிறகு நபி (ஸல்) அவர்கள் அவன் எனக்கருகில் நெருங்கியிருந்தால் வானவர்கள் அவனுடைய ஒவ்வொரு உறுப்பையும் இறாவியிருப்பார்கள் (பிய்த்து எறிந்திருப்பார்கள்)என்று கூறினார்கள்.

இதற்கு முன் நாம் கூறியதெல்லாம் தங்களை அல்லாஹ்வின் சொந்தக்காரர்கள், அவனது புனித பூமியில் வசிப்பவர்கள் என்று பீற்றிக்கொள்ளும் இணைவைப்பவர்களின் கரங்களால் நபி (ஸல்) அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஏற்பட்ட அநியாயம் மற்றும் கொடுமையின் ஒரு சிறிய தகவல்தான். இத்தகைய இக்கட்டான கால கட்டத்தில் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட சோதனையையும், வேதனையையும் முடிந்த அளவு இலகுவாக்கி அவற்றிலிருந்து முஸ்லிம்களைப் பாதுகாக்க மதி நுட்பமான ஒரு திட்டத்தைத் தீட்ட வேண்டுமென்ற முடிவுக்கு வந்தார்கள். இதற்காக இரண்டு திட்டங்களை நபி (ஸல்) அவர்கள் வகுத்தார்கள். அவ்விரு திட்டங்களால் அழைப்புப் பணியை வழி நடத்துவதிலும், இலட்சியத்தை அடைவதிலும் பற்பல பலன்கள் கிட்டின. அவையாவன:

1)
அழைப்புப் பணிக்கு மையமாகவும், ஒழுக்க போதனைக்கு உறைவிடமாகவும் அர்கம் இப்னு அபுல் அர்கம் மக்ஜூமிஎன்பவன் வீட்டை நபி (ஸல்) அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள்.

2)
முஸ்லிம்களை ஹபஷாவிற்கு (எதியோபியா) குடிபெயருமாறு கட்டளையிட்டார்கள்.  (அர்ரஹீக்குல் மக்தூம்)

சஹாபாக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை பற்றிய நபிமொழி
عن خَبَّاب بن الأرَتّ قال: قلنا: يا رسول الله، ألا تستنصر لنا؟ ألا تدعو الله لنا؟ فقال: "إنّ من كان قبلكم كان أحدهم يوضع المنشار على مفْرَق رأسه فيخلص إلى قدميه، لا يَصْرفه (4) ذلك عن دينه، ويُمْشَطُ بأمشاط الحديد ما بين لحمه وعظمه، لا يصرفه ذلك عن دينه". ثم قال: "والله ليتمن الله هذا الأمر حتى يسير الراكب من صنعاء إلى حضرموت لا يخاف إلا الله والذئب على غنمه، ولكنكم قوم تستعجلون. (تفسير ابن كثير)
கப்பாப் பின் அல்அரத் (ரளி) அறிவிக்கிறார்கள்: ‘’நாங்கள் (நபி ஸல் அவர்களிடம்) அல்லாஹ்வின் தூதரே! (எதிரிகளால் துன்புறுத்தப்படும்) எங்களுக்காக அல்லாஹ்விடம் நீங்கள் உதவி கோரமாட்டீர்களா? எங்களுக்காகப் பிரார்த்திக்கமாட்டீர்களா? என்று கேட்டோம். அதற்கு அவர்கள், உங்களுக்கு முன்னர் வாழ்ந்தவர்களில் (ஏக இறைவனை ஏற்றுக்கொண்ட) ஒருவரின் தலை வகிட்டில் ரம்பம் வைக்கப்பட்டு அவருடைய பாதங்கள்வை அது செலுத்தப்படும். (அவர் இரண்டாகப் பிளக்கப்படுவார்.) அதுகூட அவரை அவரது மார்க்கத்திலிருந்து பிறழச்செய்யவில்லை. இரும்பிலான சீப்புகளால் அவர் (மேனியில்) கோதப்பட, அது அவரது தசையையும் எலும்பையும் கடந்துசெல்லும். அதுவும்கூட அவரை அவரது மார்க்கத்திலிருந்து பிறழச்செய்யவில்லை.

அல்லாஹ்வின் மீது ஆணையாக! இந்த விஷயம் (இஸ்லாம் மார்க்கம்) முழுமைப்படுத்தப்படுவது உறுதி. இறுதியில் ஒரு பயணி (யமனிலுள்ள) ‘ஸன்ஆஎனும் இடத்திலிருந்துஹள்ர மவ்த்வரை (பயணம்) செல்வார். (வழியில்) அல்லாஹ்வையும், தனது ஆட்டின் விஷயத்தில் ஓநாயையும் தவிர வேறெதற்கும் அவர் அஞ்சமாட்டார். ஆனால், நீங்கள்தான் (பொறுமையிழந்து) அவசரப்படுகிறீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி-3612) 

எனவே, யாஅல்லாஹ்! முஸ்லிம்களை காப்பாற்றுவாயாக! உலகில் கண்ணியமாக வாழச்செய்வாயாக! எங்கெல்லாம் முஸ்லிம்களை இனப்படுகொலை செய்யப்படுகிறதோ அங்கெல்லாம் உனது கருணையினால் உயிர் காப்பாயாக! உனது பாதுகாப்பு வளையத்தை இஸ்லாமியர்களின் மீது விரிப்பாயாக! இஸ்லாத்தை ஓங்கச் செய்வாயாக! ஈமானை இறுதிவரை நிழைக்கச் செய்வாயாக! முஸ்லிம்களின் மனதிள் ஒற்றுமையை ஏற்படுத்துவாயாக! உனது சத்திய மார்க்கத்தை பாதுகாப்பாயாக! ஆமீன் யாரப்பல் ஆலமீன்

No comments:

Post a Comment